திருவனந்தபுரம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) மூத்தத் தலைவரும், கேரள சட்டப்பேரவையின் சபாநாயகருமான பி. ஸ்ரீ ராமகிருஷ்ணன் மார்ச் 12ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சுங்க துறை அலுவலர்கள் அழைப்பாணை வழங்கியுள்ளனர்.
நாட்டை உலுக்கிய கேரள தங்கக் கடத்தல் வழக்கில் சென்ற டிசம்பர் மாதம் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஸ்வப்னா சுரேஷ் கைதுசெய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கின் விசாரணை கேரள உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் சுங்க அலுவலர்கள் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், “ஸ்வப்னா சுரேஷ், முதலமைச்சர் பினராயி விஜயன், சபாநாயகர் ஸ்ரீ ராமகிருஷ்ணன் மற்றும் முதலமைச்சரின் தனிப்பட்ட உதவியாளரிடம் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சபாநாயகர் ஸ்ரீ ராமகிருஷ்ணன் மார்ச் 12ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக சுங்க அலுவலர்கள் அழைப்பாணை விடுத்துள்ளனர். முன்னதாக, எதிர்க்கட்சிகள் முதலமைச்சர், சபாநாயகர் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவர முன்வந்தனர். ஆனால், அவர்களின் கோரிக்கை வெற்றி பெறவில்லை.
இந்த வழக்கில் முதலமைச்சரின் முன்னாள் தலைமை செயலர் எம் சிவசங்கர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது முதலமைச்சர், சபாநாயகர் உள்ளிட்ட முக்கிய புள்ளிகள் மீது புகார் எழுந்துள்ளது.
இதற்கிடையில் சுங்க துறையின் அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து. கேரளத்தில் இன்று (மார்ச்6) மாநிலம் தழுவிய கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைப் போன்று கேரளத்திலும் சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.