டெல்லி: டெல்லி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களில் ஆளுநர்களுக்கு அதீத அதிகாரம் அளிக்கும் சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மம்தா பானர்ஜி பதிவிட்டுள்ளார். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அரவிந்த் கெஜ்ரிவால், “மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக மம்தா பானர்ஜி ட்விட்டரில், “ஐ எம் ஸாரி பிஎம் (பிரதமரே.. நான் வருத்தத்துடன் இதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.) நான் உங்கள் பதவியை மதிக்கிறேன். ஆனால் நீங்கள் மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சருக்கு கூடுதல் அதிகாரத்தை வழங்காமல் ஆளுநருக்கு வழங்குகிறீர்கள். இதற்கு நான் மட்டுமல்ல.. நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எதிராக இருக்கிறார்கள். கண்டனம் தெரிவிக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அந்த வகையில், நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு அளிக்கிறேன். நியமன நபருக்கு ஆதரவு அளிக்க மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களில் ஆளுநருக்கு அதீத அதிகாரம் வழங்கும் 2021 சட்டத்திருத்த மசோதாவை மார்ச் 15ஆம் தேதி உள்துறை இணையமைச்சர் கிஷண் ரெட்டி கொண்டுவந்தார். இதற்கு ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.