காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் குஜராத்தில் டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதனிடையே இன்று (ஜூலை 21) சூரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது கெஜ்ரிவால் கூறுகையில், "குஜராத் மாநில மக்கள் பாஜக ஆட்சியால் சலித்துவிட்டனர். மாற்றத்தையே விரும்புகின்றனர். குஜராத் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தால், அனைவருக்கும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். மாநிலத்தின் அனைத்து நகரங்கள், கிராமங்களிலும் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும்.
2021ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரையில் நிலுவையில் உள்ள அனைத்து மின் கட்டண தொகை தள்ளுபடி செய்யப்படும். எங்கள் ஆட்சியில் தவறு கண்டால், அடுத்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம்" எனத் தெரிவித்தார். பாஜக, காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி மட்டும் ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஆட்சி அமைத்துள்ளது. அந்த வகையில் டெல்லி, பஞ்சாப் மாநிலங்களில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. தற்போது குஜராத் மாநிலத்தில் வெற்றி பெற கவனம் செலுத்தி வருகின்றது.
இதையும் படிங்க: டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோனியா காந்தி ஆஜர்