தெலங்கானா: தெலங்கானாவில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், தெலங்கானா முதலமைச்சரும், தெலங்கானா ராஷ்டிரிய சமிதியின் தலைவருமான சந்திரசேகர ராவ், கடந்த இரண்டு நாட்களாக தேர்தல் வியூக நிபுணர் பிரஷாந்த் கிஷோருடன் ஆலோசனை மேற்கொண்டார். இரண்டு நாட்களாக பிரஷாந்த் கிஷோர், சந்திர சேகர ராவின் வீட்டில் தங்கியிருந்தார். காங்கிரஸில் இணைய முனைப்புடன் இருந்த பிரஷாந்த் கிஷோர், சந்திர சேகர ராவ் வீட்டில் இருந்தது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பிரசாந்த் கிஷோர் தலைமையேற்று நடத்திய ஐ-பேக் (Indian Political Action Committee- IPAC)அமைப்புடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக சந்திர சேகர ராவ் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த சந்திரசேகர ராவ், "தாங்கள் பிரசாந்த் கிஷோருடன் இணைந்து செயல்படவில்லை என்றும், முன்பு அவர் தலைவராக இருந்த ஐ-பேக் உடன்தான் இணைந்து செயல்படுகிறோம் எனவும் தெரிவித்தார். தங்களது தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியை டிஜிட்டல் தளத்திலும் விரிவுபடுத்தவே இந்த ஒப்பந்தம் செய்துள்ளதாகவும்'' தெரிவித்தார்.
ஐ-பேக்கின் தலைவராக இருந்த பிரஷாந்த் கிஷோர், அந்த அமைப்புடன் தொடர்பை முறித்துக் கொண்டாலும், அதன் அனைத்து முடிவுகளையும் எடுப்பதில் அவர் மறைமுகமாக ஆலோசனைகள் வழங்கிவருவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: திருப்பதி எல்இடி திரையில் பக்திப்பாடலுக்கு பதில் சினிமா பாடல் - பக்தர்கள் அதிர்ச்சி!