ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரில் பொதுமக்கள், ஓய்வு பெற்ற காவல் அலுவலர்கள் மற்றும் காவலர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 27) விமான தளம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.
நாடு முழுக்க இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், காஷ்மீர் ஐஜி (காவல்துறை தலைவர்) விஜயகுமார் செவ்வாய்க்கிழமை (ஜூன் 29) அளித்த பேட்டியில், “ஓய்வு பெற்ற காவல் அலுவலர்கள், காவலர்கள், பொதுமக்கள் பயங்கரவாதிகளின் இலக்குக்கு ஆளாகின்றனர். இதைப் பயங்கரவாதிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
நீங்கள் தொடர்ந்து குறி வைத்தால், உங்களை எவ்வாறு கையாள்வது என்பது எனக்கு தெரியும். எனக்கு இதில் 24 ஆண்டு அனுபவம் உள்ளது. அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம். இதை நான் உங்களுக்கு அறிவுறுத்துகிறேன்.
அந்தக் காவல் ஆய்வாளர் என்ன தவறு செய்தார்? மசூதியில் தொழுகை நடத்திவிட்டு வீடு திரும்பினார். அவரை பின்தொடர்ந்து சென்று பயங்கரவாதிகள் கொன்றுள்ளனர். இதன்மூலம் அவர்கள் மக்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்த முயல்கிறார்கள்.
மறுபுறம், அப்பாவி மக்கள் மீதும் குறி வைக்கிறார்கள். இந்தத் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். தொடர்ந்து, லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தளபதி நதீம் அப்ரார் மற்றும் அவரது பாகிஸ்தான் கூட்டாளி மலூரா பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்ட நடவடிக்கை, “ பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி” என்றும் கூறினார்.
மேலும் அவர், “ஸ்ரீநகரில் பாதுகாப்பு வீரர்களின் நடவடிக்கை தொடரும். அங்கு பயங்கரவாதிகள் முற்றிலும் ஒழிக்கப்படுவார்கள். நாங்கள் முழு நேரமாக பயங்கரவாதிகளை கவனித்துவருகிறோம்.
இங்கு சில ஸ்லீப்பர் செல்கள் உள்ளனர். அவர்களை கண்டறிவதில் சிக்கல் உள்ளது. எனினும் பயங்கரவாதிகளின் தகவல்கள் தொடர்ந்து சேகரிக்கப்பட்டுவருகின்றன” என்றார்.
இதையும் படிங்க : சோதனைகளை சாதனையாக்கிய பெண்சிங்கம் ஆனி சிவா- காவல் உதவி ஆய்வாளரின் தன்னம்பிக்கை கதை!