ஹைதராபாத்: டெல்லியில் கடந்த ஜனவரி 23ஆம் தேதி நடைபெற்ற நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 125வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா கேட் பகுதியில் நேதாஜியின் மெய்நிகர் உருவச்சிலையை திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், சுதந்திர போராட்ட வீரரான நேதாஜியின் ஈடு இணையற்ற சேவையை நினைவுகூரும் வகையில், இந்தியா கேட் பகுதியில் அவருக்கு சிலை வைக்கப்படும் என அறிவித்தார்.
இதையடுத்து நேதாஜி சிலை செய்யும் பணி தொடங்கப்பட்டது. தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்திலிருந்து 100 அடி நீளம் கொண்ட கருப்பு கிரனைட் பாறை, டெல்லிக்கு கொண்டுவரப்பட்டது. 280 மெட்ரிக் டன் எடை கொண்ட பாறை, 140 சக்கரங்கள் கொண்ட ராட்சத டிரக் மூலம் 1,665 கிலோ மீட்டர் பயணித்து டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது.
அந்த ராட்சத கிரானைட் பாறையிலிருந்து, நவீன கருவிகளைப் பயன்படுத்தி பாரம்பரிய இந்திய முறைப்படி சிலை செதுக்கப்பட்டது. கர்நாடகாவின் புகழ்பெற்ற இளம் சிற்பக் கலைஞரான அருண் யோகிராஜ் வழிகாட்டுதலின் கீழ் நேதாஜி சிலை உருவாக்கப்பட்டது. சிற்பக் கலைஞர்கள் சுமார் 26,000 மணி நேர உழைப்பில், 65 மெட்ரிக் டன் எடையும், 28 அடி உயரமும் கொண்ட நேதாஜி சிலையை உருவாக்கினர். நாட்டில் உள்ள மிக உயரமான ஒற்றைக்கல் சிலைகளில் இதுவும் ஒன்று.
இந்தியா கேட் பகுதியில் உள்ள நேதாஜியின் மெய்நிகர் சிலைக்கு அருகே இந்த கிரானைட் சிலை நிறுவப்பட்டுள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி இன்று(செப்.8) இரவு 7 மணிக்கு திறந்து வைக்கவுள்ளார். சிலை திறப்பின் போது மணிப்பூரி கொஞ்ச வாத்தியம், கேரள பாரம்பரிய பஞ்ச வாத்தியம் மற்றும் சந்தா இசைக்கப்படும்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 500 கலைஞர்கள் பங்கேற்கும் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளும் நடத்தப்படவுள்ளது. இந்தியா கேட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள திறந்தவெளி அரங்கத்தில் சுமார் 30 கலைஞர்கள் பாரம்பரிய நாட்டுப்புற நடனங்களை ஆடுவார்கள். பத்மபூஷன் விருது பெற்ற ஸ்ரீகிருஷ்ண ரதஞ்சன்கார்ஜி எழுதிய மங்கல பாடல்கள் பாடப்படும். நேதாஜியின் சிலை திறப்பு விழாயொட்டி வரும் 11ஆம் தேதி வரை, சிறப்பு ட்ரோன் நிகழ்ச்சிகளும் நடத்தப்படவுள்ளன.
இதையும் படிங்க: கடமைப் பாதையை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி