மும்பை: மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் நேற்று(ஜூலை 3) VLCC ஃபெமினா மிஸ் இந்தியா 2022ஆம் ஆண்டிற்கான பட்டத்திற்கு இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் பல மாநிலங்களில் இருந்து பல அழகிகள் பங்கேற்றனர்.
இந்தப் போட்டியில் இறுதியாக கர்நாடாகாவைச்சேர்ந்த ஷினி ஷெட்டி(21) என்ற அழகி ஃபெமினா மிஸ் இந்தியா-2022 பட்டத்தை வென்றார். மேலும் முதல் ரன்னர் வெற்றியாளராக ராஜஸ்தானைச் சேர்ந்த ரூபல் ஷெகாவத்தும், இரண்டாம் ரன்னர் வெற்றியாளராக உத்தரப்பிரதேசத்தின் ஷினாதா சவுகானும் வெற்றிபெற்றனர்.
இந்த இறுதிப்போட்டியில் நடிகர்கள் நேஹா துபியா, டினோ மோரியா மற்றும் மலைக்கா அரீரா ஆகியோரும், நடன இயக்குநர் ரோஹித் காந்தி, ராகுல் கண்ணா மற்றும் ஷியாமக் தாவர் ஆகியோரும் நடுவர்களாக இருந்தனர். மேலும் முன்னாள் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜும் நடுவராக இருந்தார்.
இந்தியாவின் பல மாநிலங்களில் நடத்தப்பட்ட தேர்வுகளில் இருந்து 31 பேர் இறுதிப்போட்டிக்குத் தகுதியானவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் இந்தியாவின் வெவ்வேறு 31 மாநிலங்களின் சார்பாக போட்டியிட்டனர். வெற்றியாளரின் தேர்வுக்குப்பின் முன்னாள் ஃபெமினா மிஸ் இந்தியா அழகி துபியா கூறுகையில், ‘நான் இந்தப் போட்டியில் பெற்ற அனுபவங்களை மீண்டும் என் நினைவுக்கு கொண்டு வந்துள்ளது.
இந்த உலகத்தை சக்தி மற்றும் நேர்த்தியுடன் எடுத்துச்செல்லும் ஆர்வமும் திறனும் நிறைந்த இந்த இளம் கவர்ச்சியான பெண்களுடனான எனது பயணத்தின் ஒவ்வொரு தருணத்தையும் மீண்டும் நினைவுபடுத்துகிறது’ எனக் கூறினார்.
மனிஷ் பல் என்பவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மேலும் நடிகை கிர்த்தி சனோன், லாரன் கோடிலிப் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:உறைய வைக்கும் உக்ரைன் அழகி ஹெல்லி ஷாவின் கேன்ஸ்- 2022 க்ளிக்ஸ்...