பெங்களூரு: கர்நாடக மாநிலம் பாகல்கோட் நகரில் உள்ள தோட்டக்கலை அறிவியல் பல்கலைக்கழகத்தில் 11ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில், கர்நாடக ஆளுநர் த்வார் சந்த் கெலாட் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பட்டங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டினார்.
இந்தப் பட்டமளிப்பு விழாவில், சிக்மகளூருவைச் சேர்ந்த உம்மே சாரா என்ற மாணவி, முதுகலைப் பட்டபடிப்பில் 16 தங்கப்பதக்கங்களை பெற்றார். சிக்மகளூரு மாவட்டத்தில் மாணவி ஒருவர், ஒரேநேரத்தில் 16 தங்கப்பதக்கங்களை பெறுவது இதுவே முதல்முறை.
உம்மே சாராவின் தந்தை அஸ்மத் அலி ஒரு விவசாயி, சிறுவயதிலிருந்தே அவரது விவசாயத்தை பார்த்து, அதனால் ஈர்க்கப்பட்டு தோட்டக்கலை அறிவியல் துறையை தேர்வு செய்ததாக தெரிகிறது.
இது தொடர்பாக உம்மே சாரா கூறுகையில், "சிறுவயதில் இருந்தே எனக்கு படிப்பில் எந்த சமரசமும் இல்லை. எனது பெற்றோர் ஊக்கம் அளித்து வந்தனர். பொது நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று பல்கலைகழகத்தில் இடம் பெற்றேன். அறிவியல் ஆராய்ச்சியில் சாதனை செய்து, அதன் மூலம் விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்பதே எனது நோக்கம்.
எனது பெற்றோரின் ஒத்துழைப்பால்தான் 16 தங்கப் பதக்கங்களை பெற முடிந்தது. இத்தாலியில் உள்ள படுவா பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி படிக்க விரும்புகிறேன், ஆனால் வெளிநாட்டில் முதுகலை பட்டப்படிப்புக்கு சுமார் 15 லட்சம் முதல் 20 லட்சம் ரூபாய் வரை செலவாகும். எனது மேற்படிப்புக்கு வங்கிக் கடன் கிடைக்கவில்லை. அரசாங்கம் எனது மேற்படிப்புக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்று கோருகிறேன்" என்றார்.
இதையும் படிங்க: உத்தரகண்டில் பொது சிவில் சட்டம்; சட்ட வரைவுக்குழு அமைப்பு!