கூகுள் தேடலில் (Google Search) இந்தியாவின் மோசமான மொழி எது என்ற கேள்விக்கு, கன்னடம் என முடிவுகள் கிடைத்தது கர்நாடக மாநிலத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து கன்னட மொழி தொடர்பாகப் பதிவான தவறான தகவல்களை கூகுள் நீக்கியது. மேலும் இதற்கு மன்னிப்பும் கேட்டது.
இந்த வடு ஆறுவதற்குள் கர்நாடகாவை மேலும் இழிவுப்படுத்தும்விதமாக இன்னொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. பன்னாட்டு நிறுவனமான அமேசான் பெண்கள் அணியும் நீச்சல் உடையில் (பிகினி ஆடை) கர்நாடக மாநில கொடி, முத்திரையைப் பதித்து விற்றதாக சர்ச்சை எழுந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கன்னட மக்களின் கொடியாக மஞ்சள், சிவப்பு நிறத்தைக் கொண்ட கொடி உள்ளது. மேலும், அம்மாநிலத்தின் அரசு முத்திரையாக இரண்டு சிங்கங்களின் உடல்கள் யானைகளின் முகங்களுடன் உள்ளதுபோல் இருக்கும்.
இந்நிலையில், கன்னட மக்களின் கொடியிலான நிறத்திலும், அதில் கர்நாடக அரசு முத்திரை பதிக்கப்பட்டிருப்பது போன்ற நீச்சல் உடையை ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் கனடா நாட்டில் விற்பனை செய்துவருகிறது.
இதையடுத்து கர்நாடக மாநில அரசு அமேசான் நிறுவனத்திற்கு கண்டனம் தெரிவித்து நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து அந்தப் பதிவை அமேசான் நிறுவனம் தனது தளத்திலிருந்தே நீக்கியது.
இந்தச் செயலுக்கு அமேசான் நிறுவனம் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என கர்நாடக ரக்ஷனா வேதிகே தலைவர் பிரவீன் ஷெட்டி வலியுறுத்தியுள்ளார்.