மங்களூரு: கென்யா நாட்டைச் சேர்ந்த 65 வயது பெண்மணி, இதயத்தில் உள்ள மிட்ரல் வால்வு(mitral valve) பகுதியில் ஏற்பட்ட சீரரற்ற ரத்த ஓட்டத்தின் காரணமாக இதய நோய் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு அகமதாபாத் மருத்துவமனையில் அவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டு செயற்கை வால்வு பொருத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் 8 ஆண்டுகள் கழிந்த நிலையில், செயற்கை வால்வு செயலிழந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் தீவிர மூச்சுத் திணறல் மற்றும் அதிதீவிர ரத்த அழுத்த பிரச்னைகளால் மூதாட்டி அவதிப்பட்டு வந்துள்ளார். மீண்டும் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில் 2-வது முறையாக அவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது.
இரண்டாவது முறையாக பைபாஸ் சர்ஜரி செய்து கொண்டால், உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படக்கூடும் என கருதப்பட்ட நிலையில், மாற்று சிகிச்சைக்காக மங்களூருவில் உள்ள இந்தியானா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இந்தியானா மருத்துவமனை மருத்துவர்கள் மூதாட்டியின் உடல்நிலையை பரிசோதித்த நிலையில், பைபாஸ் சர்ஜரி இல்லாமல் இதய வால்வு அறுவை சிகிச்சை செய்வது குறித்து பரிந்துரைத்துள்ளனர்.
இதையடுத்து கென்ய நாட்டு மூதாட்டிக்கு பைபாஸ் சர்ஜரி இல்லாமல் டிரான்ஸ்கேட்டர் நுரையீரல் வால்வு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. வால்வு - இன் - வால்வு என அழைக்கப்படும் அறுவை சிகிச்சை முறையில், ஏற்கனவே நுரையீரல் பகுதியில் இருக்கும் வால்வுக்குள் புதிதாக ஒரு வால்வு பொருத்தப்படுகிறது.
ஒரு மணி நேரம் நடந்த அரிய அறுவகை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவு பெற்றதாகவும், கென்ய நாட்டு மூதாட்டியின் உடல் நிலையில் சீரான அளவில் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மும்பையில் ரூ.28 கோடி மதிப்புள்ள கொக்கைன் பறிமுதல்