பெங்களூரு: கர்நாடக மாநிலம், தரபனஹள்ளியைச் சேர்ந்தவர் முபாரக் (32). அவரது மனைவி ஷிரின் பானு (25). இருவருக்கும் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் ஷிரின் பானு (25) மாயமாகி உள்ளார். இதுகுறித்து, அவரது பெற்றோர், முபாரக்கிடம் விசாரித்துள்ளனர். அதற்கு முபாரக், 18 நாள்களுக்கு முன்பே பானு காணமல் போய்விட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இதனால், சந்தேகமடைந்த பானுவின் பெற்றோர், சோலதேவனஹள்ளி காவல் நிலையத்தில் முபாரக் மீது புகார் அளித்தனர். இதனிடையே அவர் தலைமறைவாகியுள்ளார். தொடர்ந்து அவரை காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவந்த நிலையில், நேற்று (ஆகஸ்ட்.24) சோலதேவனஹள்ளி காவல் நிலையத்தில் தாமாக முன்வந்து சரணடைந்தார்.
பரபரப்பு வாக்குமூலம்
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், குடும்ப பிரச்சினை காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், ஆகஸ்ட் 5ஆம் தேதி, ஷிரின் பானு யூடியூப் பார்த்து செய்த சிக்கன் குழம்பு சுவையாக இல்லாததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த தான் பானுவை உருட்டுக்கட்டையால் பலமாகத் தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதில் பானு சம்பவயிடத்திலேயே உயிரிழந்த நிலையில், பானுவின் உடலை மூட்டையில் கட்டி, சிக்கபானவாராவில் உள்ள ஏரியில் வீசிவிட்டு பானு காணாமல் போனதாக முபாரக் நாடகமாடியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. தற்போது பானுவின் உடலை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: கந்துவட்டி: 4 சிறுமிகளை வீட்டில் வைத்து பூட்டிய கொடுமை