பெங்களூரு (கர்நாடகா): தமிழ்நாட்டிற்கு 3,000 கன அடி தண்ணீர் திறக்க காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்தது. அந்த உத்தரவை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உறுதி செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில் தண்ணீர் இல்லாத நிலையில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடக் கூடாது எனக் கூறி, கர்நாடக மாநிலத்தின் பல பகுதிகளில் விவசாயிகள், எதிர்கட்சியினர், திரைப்பட நடிகர்கள் மற்றும் பலர் கலந்து கொண்ட முழு அடைப்பு போராட்டமானது நேற்று (செப்.29) நடைபெற்றது.
இந்த நிலையில், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா, சட்ட அமைச்சர் எச்.கே.பாட்டீல், விவசாயத் துறை அமைச்சர் என்.செலுவராயசாமி, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மாநில முன்னாள் வழக்கறிஞர் ஆகியோர் உடன் நேற்று (செப்.29) ஆலோசனை செய்தார்.
இந்த ஆலோசனையின் முடிவில், தமிழ்நாட்டிற்கு 3,000 கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்திடம் அளிக்க உள்ளதாகத் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில், இன்று (செப்.30) தமிழ்நாட்டிற்கு 3,000 கன அடி தண்ணீர் திறப்பதற்கான உத்தரவை எதிர்த்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் மறுசீராய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.
இதையும் படிங்க: "காவிரி நீரை கேட்கும் உரிமை தமிழக விவசாயிகளுக்கு உண்டு" - அமைச்சர் துரைமுருகன்!