மங்களூரு (கர்நாடகா): கர்நாடகா மாநிலம் மங்களூரு அடுத்த உல்லால் பகுதியைச் சேர்ந்தவர் சதாசிவ ஆச்சார்யா. இவர் வீட்டிற்கு மாதாந்திர மின்சார பயன்பாட்டிற்கான கட்டணம் வந்துள்ளது. முன்னதாக, தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் வீட்டிற்கு வந்து மின்சாரம் பயண்படுத்தியதற்கான பில் தொகையை வழங்கி சென்றுள்ளனர். அதில், கடந்த மாதம் சதாசிவ ஆச்சார்யா குடும்பத்தினர் 99 ஆயிரத்து 338 யூனிட் மின்சாரம் பயன்படுத்தியதாக காட்டப்பட்டுள்ளது.
மேலும் அதற்கான தொகை 7 லட்சத்து 71 ஆயிரத்து 72 ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் அந்த ரசீதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சதாசிவ ஆச்சார்யாவின் குடும்பத்தினர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அனுகி தகவல் கேட்டுள்ளனர்.
இதனையடுத்து மின்னனு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின்சார கட்டணத்திற்கான தொகை 7 லட்சத்திற்கும் மேல் வந்துள்ளதாகவும், அதை சரி செய்து தவருவதாகவும் அதிகாரிகள் கூறி உள்ளனர். இதனால் சற்று நிம்மதி அடைந்த சதாசிவ ஆச்சார்யா குடும்பத்தினர், அதனைத் தொடர்ந்து வந்த 2 ஆயிரத்து 833 ரூபாய் கட்டணத்தை செலுத்திச் சென்று உள்ளனர்.
இதையும் படிங்க:Cyclone Biparjoy Impacts: குஜராத்தை புரட்டிப்போட்ட பிப்பர்ஜாய் புயல் - 22 பேர் காயம், 940 கிராமங்களில் மின்சாரம் துண்டிப்பு!
மேலும் இது குறித்து சதாசிவ ஆச்சார்யாவிடம் கேட்டபோது மின்சாரப் பயன்பாடு கட்டண பில்லை கண்டபோது, தலை சுற்றிப் போனதாகவும், அதிகாரிகள் அதை சரி செய்த கொடுத்த பிறகு நிம்மதி அடைந்ததாகவும் கூறியுள்ளார். மேலும், தங்களுக்கு மாதந்தோறும் சுமார் 3 ஆயிரம் ரூபாய் மட்டுமே மின் கட்டண பில் வந்த நிலையில், திடீரென 7 லட்சம் ரூபாய்க்கான பில் வந்த உடன் அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறியுள்ளார்.
முன்னதாக, கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், தேர்தலின்போது அவர்கள் இலவச மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தனர். ‘குருஹ ஜோதி’ என்ற திட்டத்தின் கீழ் 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்பட உள்ள நிலையில், ஒரு குடும்பத்திற்கு 7 லட்சத்து 71 ஆயிரத்து 72 ரூபாய் மின் கட்டணம் வந்த விவகாரம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனைத் தொடர்ந்து, இது தொடர்பான செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவத் தொடங்கியது. இதனையடுத்து, பொதுமக்கள் பலரும் குருஹ ஜோதி திட்டம் குறித்து கமெண்டுகளில் கேள்வி எழுப்பத் தொடங்கி உள்ளனர்.
இதையும் படிங்க:புதுச்சேரி முதலமைச்சர் முன் கதறி அழுத மூதாட்டி.. மகன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு!