பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் உள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கடந்த 10ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (மே 13) எண்ணப்பட்டன. இதில் 136 தொகுதிகளைக் கைப்பற்றிய காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது.
இத்தேர்தலில் ரேபக் தொகுதியில், தமிழ்நாடு உள்துறைச் செயலாளரான ஐஏஎஸ் அதிகாரி அமுதாவின் கணவர், ஷம்பு கல்லோலிகர் போட்டியிட்டார். இவர் தமிழ்நாடு சமூக நலத்துறையில் முதன்மைச் செயலாளராக பணியாற்றி வந்தார். ஓய்வு வயதை நெருங்கிய நிலையில், கர்நாடக மாநிலத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதற்காக 58வது வயதில் விருப்ப ஓய்வுபெற்றார். பின்னர் ரேபக் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சியிடம் அவர் வாய்ப்புகேட்டார். ஆனால் வாய்ப்பு வழங்கப்படாததால், சுயேச்சையாக தேர்தலில் களம் இறங்கினார்.
ரேபக் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஐஹோல் துர்யோதன் மகாலிங்கப்பா 57,500 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு கிடைத்த வாக்கு விகிதம் 34.79 சதவீதம் ஆகும். எனினும் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தள வேட்பாளர்களை பின்னுக்குத் தள்ளிய சுயேச்சை வேட்பாளர் ஷம்பு கல்லோலிகர் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். 54,930 வாக்குகளை அவர் பெற்றுள்ளார். 33.23 சதவீத வாக்குகளை தன்வசப்படுத்தியுள்ளார்.
இத்தொகுதியில் போட்டியிட்ட மதச்சார்பற்ற ஜனதா தள வேட்பாளர் பிரதீப் குமார் 25,393 வாக்குகளையும், காங்கிரஸ் வேட்பாளர் மஹாவீர் லட்சுமண் மொகிதி 22,685 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
இதையும் படிங்க: இந்திரா காந்திக்கு மட்டுமல்ல காங்கிரசுக்கும் ComeBack கொடுத்த தொகுதி! எது தெரியுமா?