டெல்லி : சிபிஐ இயக்குநராக ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் சூட் நியமிக்கப்பட்டு உள்ளார். கர்நாடக டிஜிபியாக இருந்த பிரவீன் சூட், மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயின் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த இரண்டு ஆண்டுகள் சிபிஐ இயக்குநர் பதவியில் அவர் நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக டிஜிபி பிரவீன் சூட்டை சிபிஐ இயக்குநராக நியமித்து மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயின் தற்போதைய இயக்குநராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால் பதவி வகிக்கிறார். மகாராஷ்டிர மாநிலத்தின் 1985ஆம் ஆண்டு பேட்சை சேர்ந்தவரான, சுபோத் குமார் ஜெய்ஸ்வாலின் பதவிக் காலம் வரும் 25ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
இதையடுத்து அடுத்த சிபிஐ இயக்குநரை தேர்வு செய்யும் பணி முடுக்கிவிடப்பட்டது. அடுத்த சிபிஐ இயக்குநரை தேர்வு செய்யும் குழுவில் அங்கம் வகிக்கும் பிரதமர் மோடி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் 3 பேரின் பெயரை அடுத்த சிபிஐ இயக்குநர் பதவிக்கு பரிந்துரை செய்தனர்.
இதில் கர்நாடக மாநில டிஜிபி பிரவீன் சூட்டை அடுத்த சிபிஐ டிஜிபியாக நியமித்து, மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. சிபிஐ இயக்குநரின் பதவிக் காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும். அதன்படி மே 2025ஆம் ஆண்டு வரை பிரவீன் சூட் சிபிஐ இயக்குநராக நீடிப்பார் எனத் தெரிவிக்கப்பட்ட்டு உள்ளது.
1986ஆம் ஆண்டு கர்நாடக பேட்ச் பிரிவைச் சேர்ந்த பிரவீன் சூட், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் கர்நாடக டிஜிபியாக நியமிக்கப்பட்டார். அடுத்த ஆண்டு மே மாதம் அவரது பணிக் காலம் முடிந்து, ஓய்வு பெற உள்ள நிலையில், சிபிஐ இயக்குநராக நியமிக்கப்பட்டு உள்ளார். 2024ஆம் ஆண்டு மே மாதத்துடன் பிரவீன் சூட் ஓய்வுபெற இருந்தாலும், சிபிஐ இயக்குநராக அவர் 2025ஆம் ஆண்டு மே மாதம் வரை தொடர்வார் என மத்திய அரசு தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.
அதேநேரம் பிரவீன் சூட் மீது கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து இருந்தார். ஆளும் பாஜகவுக்கு ஆதரவாக பிரவீன் சூட் செயல்படுவதாக கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் குற்றஞ்சாட்டு தெரிவித்து இருந்தார். கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற நிலையில், சிபிஐ இயக்குநராக பிரவீன் சூட் நியமிக்கப்பட்டு இருப்பது கூடுதல் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே மத்திய புலனாய்வு அமைப்புகளை மத்தியில் ஆளும் பாஜக அரசு தவறாகப் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ள நிலையில், கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்கும் நேரத்தில், டி.கே. சிவகுமார் குற்றச்சாட்டு தெரிவித்த ஐபிஎஸ் அதிகாரி சிபிஐ இயக்குநராக நியமிக்கப்பட்டு இருப்பது கூடுதல் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க : DK Shivakumar: டிகே சிவகுமாரின் குற்றச்சாட்டுக்கு ஆளான டிஜிபி சிபிஐ இயக்குநர் பதவிக்கு பரிந்துரை!