கர்நாடகா மாநிலம் கல்புர்கி மாவட்டத்தில் உள்ள மகாத்மா தொழுநோய் காலனியில் வசிக்கும் ஹனுமந்தா-பாசம்மா தம்பதியினர், தொழுநோயாளிகளுக்கு உதவுவதை தங்களது வாழ்நாள் சேவையாக செய்து வருகின்றனர். இதற்காக தங்களது வீட்டையும் மினி கிளினிக்காக மாற்றியுள்ளனர்.
யார் இவர்கள்?
ஹனுமந்தா ஒரு ஆட்டோ ஓட்டுநர். ஆனாலும் தான் காலையில் பணிக்குச் செல்லும் முன்னர் தனது காலனியில் வசிக்கும் 200 பேருக்காவது புண்களை சுத்தம் செய்து துணியால் கட்டிவிடுகிறார். அதன் பிறகே தனது அன்றாட பணிகளில் ஈடுபடுகிறார்.
இவரது மனைவி பாசம்மா, தொழுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பிரசவம் பார்க்கிறார். பாசம்மா முன்னதாக மருத்துவமனைகளில் செவிலியராகப் பணியாற்றியவர். ஆனால் மருத்துவமனைகளில் தொழுநோயாளிகளை நடத்தும் விதம் பாசம்மாவை மிகவும் வேதனைக்குள்ளாக்கியது. அதனால் அந்த பணியை உதறித் தள்ளிவிட்டு தன் வீட்டிலேயே அவர்களுக்கு சிகிச்சையளிக்கத் தொடங்கிவிட்டார்.
எங்கிருந்து இந்த சேவை தொடங்கியது?
பாசம்மா, ஹனுமந்தா இருவருமே மருத்துவமனைகளில் தொழுநோயாளிகளுக்கு முறையான கவனிப்பு இல்லையென்பதாலேயே இந்தச் சேவையைத் தொடங்கினர். ஹனுமந்தாவின் பெற்றோரும் தொழுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவர்களின் முறையான கவனிப்பின்றி அவதியுற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நிதியுதவி
நோயாளிகளைக் கவனித்துக் கொள்ள தேவையான பொருட்களை வாங்குவதற்காக ஹனுமந்தா தனது மாத வருமானத்தில் சில பங்கை ஒதுக்குகிறார். இவர்களின் மினி கிளினிக்கில் 200க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களின் சேவையை ஊக்கப்படுத்தும் விதமாக பலரும் இந்த மினி கிளினிக்கிற்கு நிதியுதவி செய்து வருகின்றனர்.
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் ஹனுமந்தாவின் இந்தச் சேவையை கவுரப்படுத்தும் விதமாக கடந்த 2015ஆம் ஆண்டு விருது கொடுத்தது.
இதையும் படிங்க:மருத்துவர் சாந்தாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் - மத்திய அரசுக்கு நடிகர் விவேக் கோரிக்கை