கர்நாடகா: கர்நாடக சட்டப்பேரவைக்கு கடந்த 10ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்ற நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று(மே.13) விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது.
பிற்பகல் 1 மணி நிலவரப்படி, 131 இடங்களில் காங்கிரஸ் முன்னிலையில் இருக்கிறது. பாஜக 66 இடங்களில் முன்னியில் உள்ளது. பல இடங்களில் வெற்றிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கனகபுரா தொகுதியில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தன்னை எதிர்த்து போராட்டியிட்ட பாஜக வேட்பாளர் அசோக்கை விட ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதுவரை கர்நாடக மாநில தேர்தலில் இவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் யாரும் வென்றதில்லை. இதையடுத்து கர்நாடகா காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
வெற்றி பெற்ற பின்னர் பெங்களூரில் செய்தியாளர்களை சந்தித்த டி.கே.சிவக்குமார், "தனக்கு வாக்களித்த மக்களுக்கு உருக்கமாக நன்றி கூறினார். அப்போது, திடீரென கண்கலங்கியபடி கட்சித் தலைவர்கள், தொண்டர்கள், மக்கள் அனைவருக்கும் நன்றி" என தெரிவித்தார்.
யார் இந்த இந்த டி.கே.சிவக்குமார்?
டி.கே சிவக்குமார் கர்நாடகாவில் ஒக்கலிகா சமூகத்தின் செல்வாக்கு மிக்க தலைவராவார். இவர், கடந்த 2008, 2013 மற்றும் 2018 சட்டசபை தேர்தல்களில் கனகபுரா தொகுதியில் வெற்றி பெற்றார். 2013-ல் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவையில் எரிசக்தி துறை அமைச்சராக இருந்தார்.
குமாரசாமி தலைமையிலான அமைச்சரவையிலும் அமைச்சராக பொறுப்பு வகித்தார். காங்கிரஸ் தலைவர்களான ராகுல்காந்தி மற்றும் சோனியா காந்தியின் நெருங்கிய நண்பரும் ஆவார். காங்கிரஸ் கட்சியின் மேலிடத்துடன் நல்ல உறவு கொண்டுள்ள அவர், முதலமைச்சராகும் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Karnataka Election: தமிழர்கள் அதிகம் வாழும் தொகுதிகளில் முன்னிலை நிலவரம்