மைசூர்: கடந்த ஆண்டு கர்நாடகா மாநிலத்தில் உள்ள கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை குறித்த வழக்கு விசாரணை, கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரீத்து ராஜ் அஸ்வதி, நீதிபதிகள் கிருஷ்ணா மற்றும் ஜே.எம்.காசி ஆகியோரின் அமர்வு வழக்கை 11 நாட்கள் விசாரித்தது.
இந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு கடந்த ஆண்டு மார்ச் 15ஆம் தேதி வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில், ஹிஜாப் அணிவது இஸ்லாத்தில் கட்டாயம் இல்லை என்றும், அரசுக்கு சீருடை தொடர்பாக ஆணை வழங்க அதிகாரம் உள்ளது எனக் கூறி, கர்நாடகா அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் மாணவிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய சூழ்நிலையில், கர்நாடகா மாநிலத்தில் அமைந்துள்ள மைசூர் மாவட்டம், நஞ்சன்கூடு தாலுகாவிற்கு உட்பட்ட காவலண்டே கிராமத்தில், கர்நாடக மாநில காவல்துறை மற்றும் மைசூர் மாவட்ட காவல் துறையால் கட்டப்பட்ட காவலண்டே, அந்தர்சந்தே மற்றும் ஜெயபுரா ஆகிய மூன்று காவல் நிலையங்களை, கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், கர்நாடகா மாநிலத்தில் தற்போது அமலில் உள்ள ஹிஜாப் தடை உத்தரவைத் திரும்பப் பெற அறிவுறுத்தி உள்ளதாகத் தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க: பத்ம ஸ்ரீ விருதை திருப்பி ஒப்படைப்பதாக பஜ்ரங் புனியா அறிவிப்பு!