டெல்லி: நரேந்திர மோடியை இன்று (ஜூலை 16) பி.எஸ். எடியூரப்பா நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.
மேகதாது: ஏகமனதாக முடிவு
கர்நாடகாவில் உள்ள மேகதாது வழியே பாயும் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதில் அம்மாநில அரசு தீவிரம் காட்டிவருகிறது. இதற்குத் தமிழ்நாட்டில் உள்ள ஆளும் திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, அண்மையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மேகதாதுவில் அணை கட்டக் கூடாது என ஏகமனதாக முடிவுசெய்யப்பட்டது.
இதையடுத்து, மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டக் கூடாது எனத் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கட்சிப் பிரதிநிதிகள் குழு, தமிழ்நாடு நீர்ப்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் ஒன்றிய நீராற்றல் துறை (ஜல்சக்தி) அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் சந்திப்பை அடுத்து, பிரதமர் மோடியைச் சந்திக்கும் முடிவை எடியூரப்பா எடுத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனக்கு எதுவும் தெரியாது
78 வயதான எடியூரப்பாவிற்கும் பாஜக மேலிடத்திற்கும் உரசல் ஏற்பட்டுள்ளதாகவும், அவரை முதலமைச்சர் பதவியிலிருந்து விலக்க முயற்சி எடுக்கப்படுவதாகவும் வெளியான தகவலால்தான் எடியூரப்பா சந்தித்ததாகவும் தகவல் உலாவருகிறது.
பிரதமருடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த எடியூரப்பா தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர், "கர்நாடகாவில் தலைமை மாற்றம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நீங்கள்தான் அதைச் சொல்ல வேண்டும்.
பிரதமருடனான சந்திப்பில் மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கும்படி கேட்டுக் கொண்டேன்" என்றார்.
சந்திப்பு மகிழ்ச்சி
மோடியுடனான சந்திப்பு குறித்து எடியூரப்பா தனது ட்விட்டரில், "மாநிலத்தின் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து இந்தச் சந்திப்பின்போது ஆக்கப்பூர்வமாக விவாதிக்கப்பட்டது, மேலும் மகிழ்ச்சிகரமான இருந்தது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி செல்லும் ஸ்டாலின்
இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வருகிற 18ஆம் தேதி டெல்லி செல்ல இருப்பதாகவும், டெல்லி செல்லும் ஸ்டாலின், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், உள் துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை நேரில் சந்தித்து மேகதாது அணை கட்ட அனுமதியளிக்கக் கூடாது எனவும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் பேசவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு