பெங்களூரு: கர்நாடக சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சி அறுதிப்பெரும்பான்மை உடன் வெற்றி பெற்று உள்ள நிலையில், கடந்த மே 20ஆம் தேதி, முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே. சிவகுமாரும், அமைச்சர்களாக 8 பேரும் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில், இன்று ( மே 27) 24 பேர் புதிதாக அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.
இந்த பதவியேற்பு விழா, முற்பகல் 11.45 மணிக்கு, ராஜ்பவனில் நடைபெற உள்ளதாக, முதலமைச்சரின் அலுவலகம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எம்.எல்.ஏ.,க்கள் ஹெச்.கே. பாட்டீல், கிருஷ்ணா பைரேகவுடா, என்.செலுவராயசுவாமி, கே. வெங்கடேஷ், ஹெச்.சி. மஹாதேவப்பா, காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் ஈஸ்வர் காந்த்ரே மற்றும் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் தினேஷ் குண்டுராவ் உள்ளிட்டோர், பதவியேற்க உள்ளவர்களில் முக்கியமானவர்கள் ஆவர்.
கியாதாசந்திரா என்.ராஜண்ணா, ஷரணபசப்பா தர்ஷண்பூர், சிவானந்த் பாட்டீல், ராமப்பட் பாலப்பா திம்மாப்பூர், எஸ்.எஸ். மல்லிகார்ஜூன், சிவராஜ் சங்கரப்பா டங்கடாஜி, சரண்பிரகாஷ் ருத்ரப்பா பாட்டீல், மங்கள் வைத்யா, லட்சுமி ஹெப்பால்கர், ரஹிம் கான், டி. சுதாகர், சந்தோஷ் லாட், என்.எஸ். போஸ்ராஜு, சுரேஷா பி.எஸ். மது பங்காரப்பா, எம்.சி. சுதாகர் மற்றும் பி. நாகேந்திரா உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.
மது பங்காரப்பா, லட்சுமி ஹெப்பால்கர், டி. சுதாகர், என். செலுவராயசுவாமி, மங்கள் வைத்யா மற்றும் எம்.சி. சுதாகர் உள்ளிட்டோர் துணை முதலமைச்சர் சிவகுமாருக்கு நெருக்கமானவர்கள் என்று காங்கிரஸ் கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் அமைச்சரவையில் ஆறு லிங்காயத்துகள், நான்கு ஒக்கலிகாக்கள், மூன்று பட்டியல் இனத்தினர், இரண்டு பழங்குடியினர் மற்றும் குருபா, ராஜு, மராத்தா, ஈடிகா மற்றும் மொகவீர என ஐந்து பிற பிற்படுத்தப்பட்ட சமூகங்கள், ஒரு பிராமணர் உள்ளிட்டோர் உள்ளனர். பிராந்திய வாரியான பிரதிநிதித்துவத்தைப் பொறுத்தவரை, பழைய மைசூர் மற்றும் கல்யாண கர்நாடகா பகுதிகளில் இருந்து தலா ஏழு அமைச்சர்கள், கிட்டூர் கர்நாடகா பகுதியில் இருந்து ஆறு பேர் மற்றும் மத்திய கர்நாடகாவில் இருந்து இரண்டு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.
சித்தராமையா தனது புதிய அமைச்சரவையில் ஜாதி, பிராந்திய வாரியான பிரதிநிதித்துவம் மற்றும் மூத்த மற்றும் இளைய எம்.எல்.ஏ.க்களையும் சமப்படுத்தி உள்ளார் என்று முதலமைச்சர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அமைச்சரவையில் 8 லிங்காயத்துகள், சிவகுமார் உட்பட ஐந்து ஒக்கலிகர்கள், ஒன்பது பட்டியல் சாதி அமைச்சர்கள் இடம் பெறுவார்கள் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. பதவியேற்கவுள்ள அமைச்சர்களுக்கான இலாகாக்கள், சனிக்கிழமை மாலைக்குள் அறிவிக்கப்படும் என அமைச்சர் கே.எச்.முனியப்பா தெரிவித்து உள்ளார்.
சித்தராமையா அமைச்சரவையில் இடம்பெறும் 24 கர்நாடக எம்எல்ஏக்களின் பெயர்களை முடிவு செய்ய, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர்கள் கே.சி.வேணுகோபால் மற்றும் ரன்தீப் சூரஜ்வாலா உள்ளிட்ட மத்திய காங்கிரஸ் தலைவர்களுடன் சித்தராமையா மற்றும் சிவக்குமார் தீவிர ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பட்டியலுக்கு இறுதி ஒப்புதல் அளித்தனர். அமைச்சர்கள் பெயர்கள் தொடர்பாக சித்தராமையாவுக்கும், சிவகுமாருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்தாலும், அவை விவாதத்தின் போது தீர்க்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அனைத்து மத்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் மற்றும் ஹிமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு மற்றும் அவரது ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோர், இன்று ( மே. 27) நடைபெறும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க பெங்களூரு விரைந்து உள்ளனர்.