பெங்களூரு: பாஜக சட்டப்பேரவை உறுப்பினரும், கர்நாடக சட்டப்பேரவை துணை சபாநாயகருமான ஆனந்த் மாமணி(56) உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக, சென்னை மற்றும் பெங்களூரு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். சில வாரங்களுக்கு முன்பு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல் நிலை மோசமடைந்து கடந்த இரண்டு நாட்களாக கோமா நிலையில் இருந்த அவர், நேற்று(அக்.22) இரவு உயிரிழந்தார். அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் சவுதாட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனந்த் மாமணி மறைவுக்கு கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், "எங்கள் கட்சி எம்எல்ஏவும், மாநில சட்டப்பேரவை துணை சபாநாயகருமான ஆனந்த் சந்திரசேகர மாமணியின் மறைவால் மிகுந்த வருத்தமடைகிறோம். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம். இந்த இழப்பை தாங்க அவரது குடும்பத்திற்கு கடவுள் வலிமை அளிக்கட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனந்த் மாமணி, 1990களில் கர்நாடக துணை சபாநாயகராக பணியாற்றிய சந்திரசேகர் மல்லிகார்ஜுன் மாமணியின் மகன் ஆவார். இவர் 2008ஆம் ஆண்டு பாஜகவில் சேர்ந்தார். சவுதாட்டி தொகுதியில் இருந்து முன்று முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். 2020ஆம் ஆண்டு சட்டமன்ற துணை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றியவர்.