பெங்களூரு (கர்நாடகா): ஃபேஸ்புக் உதவியுடன் 1 ஆண்டுக்குப் பின் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் தன் பெற்றோருடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம் கர்நாடக மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.
மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் சுஹாஸ். ஓராண்டுக்கு முன்பு, தனது கிராமத்தில் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தபோது தவறுதலாக ரயிலில் ஏறி பெங்களூரு வந்தடைந்தார். ரயில் எங்கு செல்கிறது என்று தெரியாமல் கர்நாடகாவிற்கு வந்து அடைந்தார்.
இந்தநிலையில் பெங்களூரு பகுதியிலேயே சுற்றித் திரிந்துள்ளார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் பிடிஎம் லேஅவுட் பகுதியில் சிறுவன் சுற்றித் திரிந்த நிலையில், அப்பகுதி பேக்கரி உரிமையாளர் நிதின், ஸ்ரீதர் சிறுவனிடம் விசாரித்துள்ளனர். ஹிந்தியில் பேசிய சுஹாஸ், ஊரின் பெயர் மறந்துவிட்டதாக கூறியுள்ளார். மேலும், தனது மூத்த சகோதரரின் பெயரை மட்டும் நினைவில் வைத்துக் கூறியுள்ளார்.
இதையடுத்து, நிதின், ஸ்ரீதர், சுஹாஸ் கூறிய பெயரை வைத்து ஃபேஸ்புக்கில் தேடியுள்ளனர். பின்னர், சுஹாஸ் அண்ணனை அடையாளம் கண்டுள்ளார். உடனடியாக அவரின் அண்ணனை ஃபேஸ்புக்கில் தொடர்பு கொண்டு சுஹாஸ் பற்றிய விவரத்தைக் கூறியுள்ளனர்.
நிதின், ஸ்ரீதர் ஆகியோர் சுஹாஸை தங்கள் வீட்டிற்கு அழைத்துச்சென்று உணவு வழங்கியுள்ளனர். ஒரு வாரத்திற்குப் பின் பெங்களூரு வந்த சுஹாஸின் பெற்றோர், சுஹாஸை கட்டியணைத்து ஆனந்த கண்ணீர் விட்டனர். நிதின், ஸ்ரீதருக்கு நன்றி தெரிவித்தனர்.
ஃபேஸ்புக் உதவியுடன் கிட்டத்தட்ட 1 ஆண்டுக்குப் பின் 17 வயது சிறுவன் தன் பெற்றோருடன் இணைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: காதலனை காண பாகிஸ்தான் பார்டரில் கால் வைத்த இளம்பெண்