கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்க காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா நேற்று (ஏப்ரல்.21) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “காரைக்காலில் கரோனா இரண்டாவது அலையினால் ஒவ்வொரு நாளும் 80லிருந்து 90 நபர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மாவட்ட நிர்வாகமானது கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நேற்று (ஏப்ரல்.21) புதுச்சேரி துணைநிலை ஆளுநர், உயர் அலுவலர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது. அதனை காரைக்கால் மாவட்டத்தில் கடைப்பிடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பொது இடங்களில் கடைப்பிடிக்க வேண்டும்.
காரைக்கால் மாவட்டத்தில் ஏறத்தாழ 12,000 நபர்கள் கரோனா தடுப்பூசி விழாவில், தடுப்பூசி போட்டுக் கொண்டதில் மகிழ்ச்சி. இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாத நபர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் விதிமுறை மீறி வெளியே வருவதாகச் செய்திகள் வருகிறது. அப்படி விதிமுறையை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்களிடமிருந்து அபராதம் விதிப்பதுடன் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் பிரகாரம் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.