டெல்லி : மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான 2வது நாள் விவாதத்தில் திமுக எம்.பி. கனிமொழி கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர், நட்டிலேயே முதல் முறையாக ஒரு மாநிலத்தை நீதித்துறை தலையிட்டு காப்பாற்றிய சூழல் உருவாகி இருப்பதாகவும், மத்திய அரசு இதற்கு வெட்கப்பட வேண்டும் என்றார். இரட்டை என்ஜின் அரசு என்றும் தங்களை பெருமைப்படுத்திக் கொள்ளும் பாஜக, மணிப்பூர் மாநிலத்தில் கூர்மையான இரட்டை வாள் ஆட்சி முறையால் சீரழிவை ஏற்படுத்தியதாக கனிமொழி கூறினார்.
மணிப்பூரில் வன்முறைச் சம்பவங்களை முதலமைச்சர் பிரேன் சிங் கையாண்ட விதம் வெட்கக் கேடானது என்றும் மாநிலத்தில் மக்கள் தொகையை காட்டிலும் போலீசாரின் எண்ணிக்கை அதிகம் இருந்ததாகவும் அசாம் ரைபில்ஸ் உள்ளிட்ட 161 படைப் பிரிவுகள் மணிப்பூரில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட போதும் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறியதாக கனிமொழி தெரிவித்தார்.
மாநிலத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டதாகவும், இரட்டை என்ஜின் அரசு ஒன்றும் செய்யவில்லை என்று கூறினார். இரண்டு பழங்குடியின பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு சாலையில் ஊர்வலமாக அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்துதலுக்கு ஆளாக்கப்பட்டதாகவும், அவர்களுக்கு அப்போது உதவிய போலீசார் தற்போது அதை அதை மறுப்பதாக கனிமொழி குறிப்பிட்டார்.
பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்ட போது தேசிய மற்றும் மாநில மகளிர் ஆணையம் எங்கே சென்றது என கேள்வி எழுப்பிய கனிமொழி, ஒருவேளை எல்லாம் கடந்து போகும் என நினைத்து இருந்த நிலையில், எதிர்பாராத நேரத்தில் இரண்டு பெண்களின் பாலியல் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பிரச்சினைகளை ஏற்படுத்தியதா என்றார்.
திரெளபதியை பற்றி பேசுபவர்கள், மகாபாரதத்தை முறையாக படித்த எவரும், அதில் குற்றவாளிகளுக்கு மட்டுமல்ல, திரெளபதிக்கு நேர்ந்ததை அமைதியாக பார்த்தவர்களும் தண்டிக்கப்பட்டனர் என்பதை அறிவார்கள். அதேபோல் கதுவா, உன்னாவ் பாலியல் வன்கொடுமை, பில்கிஸ் பானு விவகாரம், மல்யுத்த வீரர் வீராங்கனைகளின் போராட்டம், மணிப்பூர் கலவரம் உள்ளிட்டவற்றின் போது அமைதியாக இருந்தவர்களும் தண்டிக்கப்படுவார்கள் என்று கனிமொழி கூறினார்.
மணிப்பூரில் பழங்குடியின மக்கள் தங்கவைக்கப்பட்டு உள்ள முகாம்களில் போதிய வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை என்றும் உணவு, குடிநீர், இருப்பிடம் உள்ளிட்ட எந்த வித அடிப்படை வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை என்றும் மழைநீர் ஒழுகும் கூடாரங்கள் மக்கள் தங்கவைக்கப்பட்டு உள்ளதாகவும் கனிமொழி தெரிவித்தார்.
செங்கோலை மிகவும் ஆடம்பரத்துடன் நாடளுமன்றத்திற்கு கொண்டு வந்த நீங்கள் சோழர் பாரம்பரியம் பற்றி பேசினீர்கள் ஆனால் உங்களுக்கு தமிழக வரலாறு பற்றி தெரியாது. மதுரையை ஆண்ட பாண்டிய மன்னனின் செங்கோல் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அரசன், நீதி வழுவி சாதாரண மக்களை கைவிட்ட போது அது உடைந்து எரிந்தது என்றார்.
மேலும், நீதி தவறியதால் மதுரையை எரித்த கண்ணகியை பற்றி கதை தெரியுமா? என்றும் தயவு செய்து இந்தியை எங்கள் மீது திணிப்பதை நிறுத்திவிட்டு சிலப்பதிகாரத்தை படியுங்கள் என்றும் அதில் உங்களுக்கு தேவையான நிறைய கருத்துகள் இருப்பதாக கனிமொழி எம்.பி கூறினார்.
பாதுகாப்பு சார்ந்த துறைகளில் 50ஆயிரத்து மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், ரயில்வே துறையில் பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாகவும் கனிமொழி கூறினார். நாட்டில் ஏராளமானோர் வேலையில்லா திண்டாட்டத்தால் தவித்து வரும், நிலையில் மத்திய அரசு அதன் காலிப் பணியிடங்களை நிரப்ப முன் வரவில்லை என்றார்.
மேலும், எஸ்.சி., எஸ்.டி. உள்ளிட்ட இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான பள்ளிகளை மூடப்பட்டதாகவும், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்கும் 300 ரூபாய் நிதியுதவி என்பது ஒரு கிலோ தக்காளி விலைக்கு சமமாக இருப்பதகாவும் கனிமொழி எம்.பி. கூறினார்.
இதையும் படிங்க : மக்களவையில் ராகுல் காந்தி முத்தம்? பெண் உறுப்பினர்கள் சபாநாயகரிடம் புகார்?