ஆந்திரா: ஆந்திர மாநிலத்தில் மூன்று தலைநகரங்களை உருவாக்க ஜெகன்மோகன் அரசு தீவிரம் காட்டியது. நிர்வாக பணிகளுக்காக, விசாகப்பட்டினமும், சட்டப்பேரவைக்கு அமராவதியும், நீதித்துறைக்கு கர்னூலும் தலைநகராக செயல்படும் என திட்டமிடப்பட்டது. இத்திட்டத்திற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பின. வழக்குகளும் தொடரப்பட்டன.
ஆனால், ஜெகன்மோகன் தனது திட்டத்தில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், மூன்று தலைநகரங்கள் அமைப்பது தொடர்பான வழக்கில், கடந்த மார்ச் 3ஆம் தேதி ஆந்திர உயர் நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதன்படி, தலைநகர் அமராவதியில் குடிநீர், சாலைகள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகறை ஒரு மாதத்தில் செய்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இந்த உத்தரவு தொடர்பாக, ஆந்திர சட்டப்பேரவையில் விவாதம் நடத்தப்பட்டது. அப்போது பேசிய முதலமைச்சர் ஜெகன்மோகன், நீதித்துறை தனது வரம்புகளை மீறி விட்டது என்றும், நடைமுறையில் சிறிதும் சாத்தியமில்லாத உத்தரவுகளை பிறப்பித்துள்ளது எனவும் தெரிவித்தார்.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அரசியலமைப்பு சட்டத்தை மட்டுமின்றி, மாநில அரசின் அதிகாரத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறது என்றும் தெரிவித்தார். இந்த உத்தரவு கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்றும் குற்றம் சாட்டினார். உயர் நீதிமன்றத்தை அவமதிப்பது தங்களது நோக்கமில்லை என்றும், அதேநேரம் மாநில அரசின் அதிகாரத்தை பாதுகாப்பது தங்களது பொறுப்பு என்றும் தெரிவித்தார்.
உட்கட்டமைப்பு வசதிகளை ஒரு மாதத்தில் செய்து முடிப்பது எந்த வகையில் சாத்தியம் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும், தங்களது அதிகார பரவலாக்க கொள்கையில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும், மூன்று தலைநகரங்கள் அமைக்கும் திட்டத்திலும் எந்தவித மாற்றமும் இருக்கப்போவதில்லை என்றும் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்தார். இந்த விவகாரத்தில் சட்ட ரீதியாக போராடுவோம் என்று அவர் கூறினார்.
இதையும் படிங்க: 'இந்த ஆண்டின் இறுதிக்குள் 5G சேவை வரப்போகுது' - மத்திய தகவல் தொடர்புத் துறை தகவல்!