ஜோஷிமத்: உத்தரகாண்ட் மாநிலம் ஜோஷிமத் நகரில் நேற்று முன்தினம் (ஜன.6) ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக வீடுகள் மற்றும் சாலைகளில் விரிசல்கள் ஏற்பட்டன. மொத்த நகரமும் நில அதிர்வால் பாதிக்கப்பட்டது. அங்கிருந்த சுமார் 600 வீடுகளிலும் பெரிய விரிசல்கள் ஏற்பட்டன. கோயில் ஒன்று இடிந்து விழுந்துள்ளது.
ஜோஷிமத் நகரமே பூமிக்குள் புதையும் அளவுக்கு மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி நேற்று ஜோஷிமத் நகரில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் மக்களை அப்புறப்படுத்தி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க முதலமைச்சர் உத்தரவிட்டார்.
இதையடுத்து ஏராளமான பொதுமக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நில அதிர்வுக்கான காரணம் மற்றும் தற்போதைய நிலைமையை ஆய்வு செய்வதற்காக மாநில அரசு நிபுணர்கள் குழுவை அனுப்பியுள்ளது.
இந்த நிலையில், ஜோஷிமத் நில அதிர்வு தொடர்பாக இன்று(ஜன.8) பிரதமர் அலுவலகத்தில் உயர்மட்ட ஆலோசனை நடைபெறவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் முதன்மைச் செயலாளர் பி.கே.மிஸ்ரா, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். இதில், ஜோஷிமத் மாவட்ட அதிகாரிகள் மற்றும் உத்தரகாண்ட் அரசின் மூத்த அதிகாரிகளும் காணொலி மூலம் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.