ராஜஸ்தானின் புஷ்கர் நகரம், ஹரியானாவின் பிவானி நகரம், குஜராத்தின் அகமதாபாத் ஆகிய இடங்களில் ஆசிரமங்களை நடத்திவந்தவர் சாமியார் ஆசாராம் பாபு. இந்த ஆசிரமங்களில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துவந்தது.
இந்நிலையில், கடந்த 2013ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் ஆசிரமத்தில் சிறுமி (16) ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பெயரில் சாமியார் ஆசாராம் பாபு கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்த ராஜஸ்தான் சிறப்பு நீதிமன்றம், அவருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிப்பதாக 2018 ஏப்ரல் 24ஆம் தேதி அன்று தீர்ப்பளித்தது.
இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்த ஆசாராம் பாபுவின் முக்கிய உதவியாளரும், ஆதரவாளருமான ராகுல் கே சச்சாரின் வாக்குமூலம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது ஜோத்பூர் சிறையில் வாழ்நாள் சிறை தண்டனை அனுபவித்துவரும் சாமியார் ஆசாராம் பாபு, பிணைக்கோரி மூத்த வழக்கறிஞர்கள் ஜக்மல் செளத்ரி, பிரதீப் செளத்ரி மூலம் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த பிணை மனுவானது, ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதிகள் சந்தீப் மேத்தா, ராமேஸ்வர் வியாஸ் தலைமையிலான அமர்வின் முன்பாக 2021ஆம் ஆண்டு ஜனவரி மூன்றாம் வாரத்தில் விசாரணைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஏழு ஆண்டுகளில், ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தொடங்கி உச்ச நீதிமன்றம் வரை மேல்முறையீடு செய்தும் ஆசாராம் பாபுவுக்கு பிணை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : லவ் ஜிகாத் சட்டம்; 'முதலில் நிதிஷ் குமார் இயற்றட்டும், அப்புறம் பார்க்கலாம்'- சஞ்சய் ராவத்