குண்டூர்(ஆந்திரப் பிரதேசம்): தக்கெல்லபடுவில் தனது காதலியை கழுத்தறுத்துப் படுகொலை செய்த காதலர், தானும் தற்கொலை செய்துகொள்ள முயன்றபோது காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.
தபஷ்வி எனும் மூன்றாம் ஆண்டு படிக்கும் பல் மருத்துவ மாணவி, தக்கெல்லப்படுவில் உள்ள தனது தோழியின் வீட்டில் இருந்துள்ளார். அப்போது அங்கு வருகை தந்த தபஷ்வியின் காதலர் கணேஷ்வர், அறுவை சிகிச்சை செய்யும் கத்தியால் தபஷ்வியின் கழுத்தை அறுத்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த தபஷ்வியின் தோழி அலறியடித்து வெளியே ஓடி வந்ததும், தபஷ்வியை மற்றொரு அறைக்கு கொண்டுசென்ற கணேஷ்வர் அந்த அறையை பூட்டியுள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சப்தம் கேட்டு விரைந்த அக்கம்பக்கத்தினர், அறைக் கதவை உடைத்து தபஷ்வியை மீட்டு மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். அப்போது தற்கொலைக்கு முயன்ற தபஷ்வியின் காதலர் கணேஷ்வரை காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
விஜயவாடாவிலுள்ள மருத்துவக் கல்லூரியில் பல் மருத்துவப் படிப்பை பயின்று வரும் தபஷ்வி, தனது அத்தையுடன் தங்கி வருகிறார். இவரின் பெற்றோர்கள் மும்பையில் பணிபுரிந்து வரும் நிலையில், மணிகொண்டாவைச் சேர்ந்த ஐ.டி பணியாளர் கணேஷ்வரை சமூக வலைதளத்தில் சந்தித்து, காதல் வயப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் கணேஷ்வர் குறித்து காவல்துறையில் தபஷ்வி புகார் அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணேஷ்வர் தபஷ்வியை கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மூதாட்டிகளை குறிவைத்து பலாத்காரம் செய்த இளைஞர்: நீதிமன்றம் அதிரடி ஆணை!