ஜார்கண்ட் மாநிலம் காட்ஷிலா பகுதியில் வசிக்கும் கூலித்தொழிலாளி லாடம், தினமும் 198 ரூபாய் சம்பாதித்துவருகிறார். அவருக்கு, வணிகவரித் துறையினர் 3.5 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஆனால், இதை லாடம் பெரிதும் கண்டுகொள்ளவில்லை.
வணிகவரித் துறையினர் பணம் செலுத்துவதற்கான காலம் முடிவடைந்ததையடுத்து, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின்பேரில் அப்பகுதிக்கு விரைந்த காவல் துறையினர், லாடமை கைதுசெய்தனர். ஆனால், அவரின் சூழ்நிலை குறித்து, கிராம மக்கள் கூறியதையடுத்து, லாடமை விடுவித்தனர். இதையடுத்து, காவல் துறையினர் நடத்திய விசாரணையில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன.
லாடமின் ஆதார், பான் அட்டை, வங்கிக் கணக்கை விவரங்களைச் சமர்ப்பித்து நிறுவனத்திற்கு, ஜிஎஸ்டி அலுவலர்கள் இந்த எண்ணை (20 AWVPM 0673 QIZV) ஒதுக்கியுள்ளனர். இந்நிறுவனம், 2018-19 நவம்பர்-டிசம்பர் காலக்கட்டத்தில், ஐந்து கோடியே 58 லட்சத்து ஐந்தாயிரத்து 408 ரூபாய் மதிப்பிலான ஸ்டீலை, எஃகு திரினேத்ரா டிரேடர்ஸ், ஓம்கார் டிரேடர்ஸ், டிரினாத் எண்டர்பிரைசஸ், ஆலம் மெட்டல் ஸ்டோர், சிந்துஜா ஸ்டீல் மற்றும் சுபத்ரா ஆகிய நிறுவனங்களுக்கு விற்பனை செய்தது.
கிட்டத்தட்ட, 87 இணைய வழியிலான கட்டணங்களுக்கு ஜிஎஸ்டி வரி செலுத்தாமல் இருந்துள்ளனர். இதையடுத்துதான், வணிகவரித் துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
கிடைத்த தகவலின்படி, 2018இல் லாடமிடம் அவரது உறவினர் பைலா முர்மு, அரசு மாதம் இரண்டாயிரம் ரூபாய் வங்கியில் செலுத்த உள்ளதால், அதற்காக வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும் என அடையாள அட்டைகளை வாங்கியுள்ளார்.
அந்த அடையாள அட்டைகளை பைலா தனது மருமகன் சுனராமிடம் வழங்கியுள்ளார். அதனை, சுனராம் அவரின் நண்பர் சுஷந்திடம் கொடுத்துள்ளார். பின்னர், லாடமின் அடையாள அட்டைகள் எங்கு சென்றது என யாருக்கும் தெரியவில்லை.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை, ஜாம்ஷெட்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. லாடமின் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டது, மேலும் அவரிடம் ஏமாற்றிய நிறுவனம் குறித்து 7 கேள்விகள் கேட்கப்பட்டன. நிறுவனம் மற்றும் பரிவர்த்தனை தொடர்பாக எதுவும் தெரியாது என அவர் மறுத்தார். இவ்விவகாரத்திலிருந்து தன்னை விடுவிக்கக்கோரி நீதிபதியிடம் லாடம் மன்னிப்பு கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.