ஜார்க்கண்ட மாநிலத்தில் தற்போது, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. இதற்கிடையே, கூட்டணியில் குழப்பம் நிலவிவருததாகவும் அரசின் மீது ஆளும் கூட்டணியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அதிருப்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன், தேசிய தலைநகரில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார்.
கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மாநிலங்களவை உறுப்பினர் தீரஜ் சாஹூ, ஜார்க்கண்ட் காங்கிரஸ் பொறுப்பாளர் ஆர்பின் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த சோரன், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு எனக் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், "எனது தலைமையிலான அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவுபெற்றுள்ளது. இந்தாண்டு, பொது மக்களுக்கு ஆதரவான பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் வளர்ச்சி திட்டங்களை முன்னெடுக்க காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிகளுக்கிடையே இணக்கமான சூழலை உறுதிப்படுத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அரசின் செயல்பாடுகளில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் திருப்தியாக உள்ளனர்" என்றார்.