மும்பை: இந்திய விமானப் போக்குவரத்துத்துறையில் முன்னணி நிறுவனமாக நரேஷ் கோயலின் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் விளங்கியது. இந்த நிறுவனம் கடந்த 1992ம் ஆண்டு தொடங்கப்பட்டு, விமான போக்குவரத்துத் துறையில் முக்கிய இடத்தை தக்கவைத்து இருந்தது. ஆனால் தொடர்ந்து இந்நிறுவனம் சில வருடங்களில் நிதி நெருக்கடியில் சிக்கியது.
பின்னர், நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்த அதிக பணம் தேவைப்பட்ட நிலையில் வங்கிகளில் கடன் பெற அந்நிறுவனம் முனைப்புக் காட்டவே, வங்கிகள் கடன்தர மறுத்துள்ளன. இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டுடன் ஜெட் ஏர்வேஸ் நிறுவனமானது மூடப்பட்டு, அந்நிறுவனத்துக்குச் சொந்தமான 119 விமானங்கள் உள்ளிட்ட அனைத்தும் தீர்ப்பாயம் மூலம் மற்ற நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.
இதற்கு முன்னதாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் கனரா வங்கியில் இருந்து 848.86 கோடி ரூபாய்க் கடன் பெற்றுள்ளார். அதில் 538.62 கோடி ரூபாய்க் கடனை திரும்பச் செலுத்தாமல் இருந்த நிலையில் கடன் வழங்கிய கனரா வங்கி இதுகுறித்து சிபிஐ-யில் புகார் அளித்துள்ளது.
அதையடுத்து, சிபிஐ அதிகாரிகளின் முதற்கட்ட விசாரணையையில், நரேஷ் கோயல் கனரா வங்கியில் இருந்து தனது ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்காக கடன் பெற்றுவிட்டு அந்த தொகையை அவரின் ஜெட்லைட் நிறுவனத்திற்குப் பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து, பணமோசடி வழக்கில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் கோயல், அவரது மனைவி அனிதா மற்றும் அவரது விமான நிறுவனத்தின் சில முன்னாள் நிர்வாகிகள் மீது சிபிஐ எஃப் ஐ ஆர் பதிவு செய்தது. பின்னர் சிபிஐ பரிந்துரையின் பேரில் இந்த வழக்கானது அமலாக்கத்துறைக்கு மாற்றப்பட்டது.
அதையடுத்து மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலிடம் பல கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது. அந்த நீண்ட நேர விசாரணையில் அந்நிறுவனம் பணமோசடியில் ஈடுபட்டது உறுதிசெய்யப்பட்டு, ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் கைது செய்யப்பட்டார்.
பின்னர், பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அவர் நேற்று (செப்.2) மதியம் 12.30 மணியளவில் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது நீதிமன்றத்தில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு எனக் கூறி கடன் வாங்கிய பணத்தை அதன் நிறுவனர் நரேஷ் கோயல் தனிப்பட்ட லாபத்திற்காக தவறாகப் பயன்படுத்தியதாக அமலாக்கத்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.
மேலும் கடனாக வாங்கப்பட்ட அப்பணம் சட்ட விரோதமாக மர பொருட்கள், ஆடைகள், நகைகள் போன்றவைகள் வாங்க பயன்படுத்தியதாகவும், அவரது குடியிருப்பு ஊழியர்களின் சம்பளம் மற்றும் அவரின் மகளுக்குச் சொந்தமான தயாரிப்பு நிறுவனத்தின் செயல்பாட்டு செலவுகளை சமாளிப்பதற்கு பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் கோயல், அவரால் உருவாக்கப்பட்ட பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளுக்கு அந்த பணத்தை மாற்றி, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் சொத்துக்களை வாங்கியுள்ளதாக கூறிய அமலாக்கத்துறை அவரை 14 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரியது. பின் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், நரேஷ் கோயலை செப்டம்பர் 11ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
இதையும் படிங்க: Jet Airways : ரூ.538.62 கோடி பணமோசடி.. ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் அமலாக்கத்துறையால் கைது.!