பெங்களூரு: மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் நந்திகிராம் பகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டிருந்தார். அப்போது, கோயில் ஒன்றில் சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பும்போது, அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டார். இதில் காயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், மம்தா பானர்ஜி மீதான தாக்குதலுக்கு, மதசார்பாற்ற ஜனதா தள தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா கண்டனம் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் ஹரதனஹல்லி கோயிலில் மனைவியுடன் சிவராத்திரி விழாவில் கலந்துகொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, " மம்தா பானர்ஜி மீதான தாக்குதல் செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். அவர் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். வெற்றி, தோல்வி என்பது அரசியலில் சாதாரணம். ஆனால் இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் ஜனநாயகத்தை சீர்குலைக்கின்றன.
இவற்றைத் தவிர்க்க அனைத்து தரப்பினரும் கட்டுப்பாடுடன் செயல்படுவார்கள் என நம்புகிறேன். தேர்தலில் வெற்றிபெற கட்சிகள் இந்த நிலைக்கு சென்றிருக்கக் கூடாது என கூறினார்.