கோழிக்கோடு: கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த இஸ்லாமிய பெண்ணான ஜஸ்னா சலீம், சிறு வயது முதலே இந்துக் கடவுளான கிருஷ்ணர் மீது ஈடுபாடு கொண்டிருந்தார். அதன் காரணமாக கிருஷ்ணரின் படங்களை ஓவியமாக வரையத் தொடங்கினார்.
ஆரம்பத்தில் அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தபோதும், கிருஷ்ணர் படத்தை வரைவது அவருக்கு மிகவும் பிடித்துவிட்டதால், அதைத் தொடர்ந்து செய்து வந்தார். தனது இந்து தோழிகளுக்கும், கிருஷ்ணரின் பக்தர்களுக்கும் இதுபோன்ற ஓவியங்களை வரைந்து பரிசாக கொடுத்து வந்தார்.
பிறகு கிருஷ்ணர் ஓவியம் வரைவதையே தனது தொழிலாக மாற்றிக் கொண்ட ஜஸ்னா, இந்து கோயில்களுக்கும் தனது ஓவியங்களை கொடுத்து வந்தார். கடந்த 2021ஆம் ஆண்டு தான் வரைந்த கிருஷ்ணர் ஓவியத்தை பந்தளம் கிருஷ்ணர் சுவாமி கோயிலுக்கு வழங்கினார்.
இந்த நிலையில், ஜஸ்னா சலீம் தான் வரைந்த 101 கிருஷ்ணர் ஓவியங்களை குருவாயூர் கோயிலுக்கு பரிசாக வழங்கியுள்ளார். ஜஸ்னா ஓவியங்களை வழங்க, கோயிலின் தலைமை அர்ச்சகர் சென்னாஸ் தினேசன் நம்பூதிரிபாட் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் ஜஸ்னாவின் தந்தை அப்துல் மஜீத்தும், அவரது சகோதரரும் கலந்து கொண்டனர். இந்த 101 ஓவியங்களை வரைய நான்கு மாதங்கள் ஆனதாக ஜஸ்னா தெரிவித்தார்.
இதையும் படிங்க: புத்தாண்டையொட்டி மணக்குள விநாயகர் கோயிலில் பக்தர்கள் சிறப்பு தரிசனம்