டெல்லி: 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370யை மத்திய அரசு ரத்து செய்து, காஷ்மீர், லடாக் என யூனியன் பிரதேசங்களாக உருவாக்கப்பட்டது. மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைக்குப் பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், பலரும் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழங்கு தொடர்ந்தனர்.
சிறந்து அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிராகப் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், அவற்றை உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு ஒரே வழக்காக விசாரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆண்டுக்கணக்கில் நிலுவையிலிருந்த இந்த வழக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி துவங்கியது. 16 நாட்கள் இந்த வழக்கின் மீது விசாரணை நடைபெற்ற நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள், சஞ்சய் கிஷன் கவுல், சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய் மற்றும் சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியது. இதில் நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், பி.ஆர்.கவாய், சூர்யகாந்த் ஆகியோர் ஒரு தீர்ப்பை வழங்கினர்.
நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் சஞ்சீவ் கண்ணா ஒரு தீர்ப்பு வழங்கி இருந்தனர். மூன்று விதமான தீர்ப்புகள் வழங்கப்பட்டிருந்தாலும் அதனை ஒரே தீர்ப்பாகத் தான் கருத வேண்டும் எனத் தெரிவித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தீர்ப்பினை வாசித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது,
- ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி இருக்கும்போது மத்திய அரசு எடுக்கும் முடிவுகளை எதிர்த்து வழக்குத் தொடர முடியாது.
- ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி இருக்கும் போது மாற்ற முடியாத முடிவுகளை மத்திய அரசு எடுக்க முடியாது என்கின்ற வாதங்கள் நிராகரிக்கப்படுகின்றன.
- குடியரசுத் தலைவர் ஆட்சி நடக்கும் போது மாநில அரசின் அதிகாரங்களை மத்திய அரசு எடுக்கலாம்.
- சட்டமன்றத்தின் பரிந்துரைகள் குடியரசுத் தலைவரைக் கட்டுப்படுத்தாது.
- 370ஆவது சட்டப்பிரிவை நீக்கக் குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது.
- ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370ஆவது சட்டப்பிரிவை நீக்கியது செல்லும்.
- ஜம்மு காஷ்மீரை இந்தியாவுடன் சேர்ப்பதற்கும், போர் சூழலைக் கட்டுப்படுத்தவும் செய்யப்பட்ட ஒரு தற்காலிக ஏற்பாடு தான் சட்டப்பிரிவு 370.
- ஜம்மு காஷ்மீர் மற்ற இந்திய மாநிலங்களிலிருந்து வேறுபட்ட இறையாண்மையைக் கொண்டிருக்கவில்லை.
- ஜம்மு காஷ்மீர் ஒருங்கிணைந்த இந்தியாவின் ஒரு பகுதியே.
- லாடாக்கை யூனியன் பிரதேசமாக உருவாக்கியது செல்லும்.
- 2024 செப்டம்பர் 30க்குள் காஷ்மீரில் தேர்தல் நடத்தி மாநிலத்திற்கான அங்கீகாரம் வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.