டெல்லி: கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் சுகேஷ் சந்திரசேகர். இவர் தொழிலதிபர்கள், அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பலரை ஏமாற்றி பண மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தன. அதிமுக பிளவுபட்டிருந்தபோது இரட்டை இலை சின்னத்தை சசிகலா தரப்புக்கு வழங்குவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க டிடிவி தினகரன் முயன்றதாக கூறப்பட்டது.
அப்போது, டிடிவி தினகரன் சார்பில் தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுத்ததாக சுகேஷ் சந்திரசேகர் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து சென்னை, பெங்களூருவில் சுகேஷ் சந்திரசேகருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் கணக்கில் வராத 2 கிலோ தங்கம், 82 லட்சம் ரூபாய் ரொக்கம், சொகுசு கார்கள் என கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் சுகேஷின் மனைவி லீனா மரியாவும் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், சிறையில் உள்ள தனது மனைவியை அடிக்கடி பார்க்க அனுமதி வழங்கக்கோரி, சுகேஷ் திகார் சிறையில் கடந்த 4ஆம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
கைதிகள் மாதத்தில் இருமுறை உறவினர்களை சந்திக்க அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் தனது மனைவியை அடிக்கடி சந்திக்க வேண்டும் எனக் கோரி, இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். இதன் காரணமாக அவரது உடல் எடை 5 கிலோ குறைந்துவிட்டதாகவும், குழாய்கள் மூலம் திரவ உணவுகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதோடு உண்ணாவிரதத்தை கைவிடும்படி தாங்கள் அறிவுறுத்தியும் அவர் கேட்கவில்லை என்றும், அவரது நிலைமை மோசமாக இருப்பதால் இதுதொடர்பாக நீதிமன்றத்தில் முறையிடுவோம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.