சத்ரா: ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தில் பண்டார்சுவான் கிராமத்தைச் சேர்ந்த பூல் தேவி என்ற பெண்மணிக்கு, கடந்த 12ஆம் தேதி இரவு ஆண் குழந்தை பிறந்தது. பிறந்தபோது குழந்தை ஆரோக்கியமாக இருந்த நிலையில், அடுத்த நாள் இரவு குழந்தையின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. குக்கிராமம் என்பதாலும், போக்குவரத்து வசதி இல்லாததாலும் குழந்தையை இரவு நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியவில்லை.
காலை வரை காத்திருந்த நிலையில், குழந்தை இறந்துவிட்டது. குழந்தையின் தந்தை சுமன் மஹதோ சிறையில் இருப்பதால், கடைசியாக குழந்தையின் முகத்தை கணவரிடம் காண்பிக்க வேண்டும் என எண்ணிய பூல் தேவி, இறந்த குழந்தையை எடுத்துக் கொண்டு சிறைக்கு சென்றார். ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுமன் மஹதோவை சந்திக்க சிறை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.
அதிகாரிகளிடம் அனுமதி கோரி சுமார் 7 மணி நேரமாக சிறைச்சாலை வாசலில் இறந்த குழந்தையுடன் காத்திருந்தார் தேவி. அதிகாரிகள் அனுமதிக்காததால் ஆத்திரமடைந்த அவர், பிற்பகலில் இறுதிச் சடங்கு செய்வதற்காக குழந்தையை எடுத்துச் சென்றுவிட்டார். இறந்த குழந்தையை கடைசியாக பார்க்க தந்தையை அனுமதிக்காத அதிகாரிகளின் மனிதாபிமானமற்ற செயல் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: குஜராத்தில் ரூ.1,026 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்