நாக்பூர்: மத்தியப்பிரதேச மாநிலம், ஜபல்பூர் மறைமாவட்ட ஆயர் பிசி சிங், கல்வி நிறுவனங்களில் வசூலிக்கப்பட்ட கட்டணத்திலிருந்து இரண்டு கோடியே 70 லட்சம் ரூபாயை மோசடி செய்ததாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில், மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே ஆயர் பிசி சிங் தலைமறைவாகிவிட்டார். அவர் வெளிநாட்டுக்கு தப்பியோடியதாக கூறப்பட்டது. கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ஆயர் பிசி சிங் வீட்டில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.
அதில், 1 கோடியே 65 லட்சம் ரூபாய் ரொக்கம், 18,000 அமெரிக்க டாலர்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், ஜெர்மனியில் இருந்து ஆயர் பிசி சிங், இந்தியா வருவதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நாக்பூர் விமான நிலையத்தில் தயாராக இருந்த போலீசார், ஆயர் பிசி சிங்கை கைது செய்து ஜபல்பூருக்கு அழைத்துச்சென்றனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.