ஜம்மு: ஜம்மு காஷ்மீர் போலீசாரால் தேடப்பட்டுவந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளான தலிப் உசைன் மற்றும் பைசல் அகமது ஆகியோர் இன்று பிடிபட்டனர். ரியாசி நகரில் பதுங்கியிருந்த அவர்களை கிராமவாசிகள் சிறை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடமிருந்து, 2 ஏகே ரக துப்பாக்கிகள், ஏழு கையெறி குண்டுகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
பயங்கரவாதிகளை பிடித்துக் கொடுத்த கிராம வாசிகளுக்கு காஷ்மீர் காவல்துறை டிஜிபி 2 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். அதேபோல் ஆளுநர் மனோஜ் சின்ஹா 5 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையை அறிவித்துள்ளார்.
ரஜோரி மாவட்டத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய லஷ்கர் இ தொய்பா தீவிரவாதியான பாகிஸ்தான் காசிம் உடன், தலிப் உசைன் தொடர்பில் இருந்துள்ளார் என போலீசார் தெரிவித்தனர். கைதான இரண்டு பயங்கரவாதிகளும் எல்லையோர மாவட்டங்களான ரஜோரி மற்றும் பூஞ்ச்சில் பயங்கரவாதத்தை வேரூன்ற முயற்சித்து வந்தார்கள் என்றும், அவர்கள் கைது மிகப்பெரிய திருப்புமுனை என்றும் போலீசார் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் மற்றொரு திருப்புமுனையாக, கைது செய்யப்பட்ட தலிப் உசைன் பாஜகவின் சிறுபான்மை பிரிவில் பொறுப்பு வகித்தவர், அவர் கடந்த மே மாதம் 9ஆம் தேதி, ஜம்முவில் பாஜகவின் ஐடி மற்றும் சமூக ஊடக பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. காஷ்மீரின் பாஜக தலைவர் ரவீந்திர ரெய்னா உள்ளிட்ட பல மூத்த தலைவர்களுடன் தலிப் உசைன் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க:குஜராத்தைச் சேர்ந்தவர் அமெரிக்காவில் சுட்டுக் கொலை!