சமீபத்தில் நடிகை டாப்சி மற்றும் இயக்குநர் அனுராக் காஷ்யப்புக்குச் சொந்தமான 28 இடங்களில் வருமான வரித்துறை நேற்று(மார்ச் 4) அதிரடி சோதனை நடத்தி வந்தனர். சோதனையில் ரூ.650 கோடிக்கும் மேல் முறைகேடு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் குறித்து மும்பை, ஹைதராபாத், டெல்லி மற்றும் புனே போன்ற இடங்களில் உள்ள மது வர்மா மொன்டனா, விக்ரமாதித்ய மோத்வானே, விகாஷ் பெல் ஆகியோரின் வீட்டிலும் கடும்சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மார்ச் 3ஆம்தேதி தொடங்கிய சோதனை இன்று வரை தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது.
இதையடுத்து, டாப்சி வீட்டில் நடத்திய சோதனையில் சுமார் 5 கோடி மதிப்புள்ள பண ரசீது எடுக்கப்பட்டது. விசாரணை மேற்கொண்டதில், இந்த தொகை 12 படத்திற்கான முன்தொகை என தகுந்த ஆதாரங்கள் கிடைத்தன. இதனையடுத்து உரிய ஆவணங்களின்றி இருந்த ரூ. 300 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாகவும், பல போலி ரசீதுகளை எடுத்துள்ளதாகவும் மற்றும் நடிகை டாப்சி, இயக்குநர் அனுராக் காஷ்யப்பின் வாட்ஸ் உரையாடல்கள் அழிக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல், நடிகை டாப்சி மற்றும் இயக்குநர் அனுராக் காஷ்யப் புனேவில் உள்ள ஹோட்டலில் தங்கிப் பேசிக்கொண்டதாகவும் அறியப்படுகிறது. இதனைத்தொடர்ந்து மும்பையில் உள்ள 'பாண்டம் ஃபிலிம்', 'குவான் டேலண்ட் மேனேஜ்மென்ட்' நிறுவனத்திடமிருந்து ஏராளமான ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் தரவு வருமானவரித் துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.