ஐதராபாத் : நிலவு குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, தொடர்ந்து சூரியன் குறித்து ஆராயவும் ஆர்வம் கொண்டு உள்ளது. அதன் ஒரு பகுதியாக ஆதித்யா எல்1 விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் செலுத்த திட்டமிட்டு உள்ளது.
சூரியனின் புறவெளியை ஆய்வு செய்ய திட்டமிட்டு உள்ள இஸ்ரோ, அதற்காக ஆதித்யா எல்1 விண்கலத்தை, பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று (செப். 2) காலை 11.50 மணிக்கு விண்ணில் ஏவ திட்டமிட்டு உள்ளது. அதற்கான 23.40 மணி நேர கவுன்டவுன் நேற்று (செப். 1) பகல் 12.10 மணி அளவில் தொடங்கப்பட்டன.
சந்திரயான் 3 திட்ட வெற்றியைத் தொடா்ந்து இஸ்ரோவின் அடுத்த சாதனை பயணமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுவதால் உலக நாடுகளின் பார்வை இந்தியாவின் மீது பலமாக விழுந்து உள்ளது எனக் கூறினாலும் மிகையாகாது. பூமியில் இருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் இந்த ஆதித்யா எல்1 விண்கலம் நிலைநிறுத்தப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது பூமிக்கும், சந்திரனுக்கும் இடையிலான தூரத்தை விட கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகம் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். ஆதித்யா எல்1 விண்கலம் அதன் இலக்கை அடைய ஏவியதில் இருந்து எல்-1 (லாக்ரேஞ்ச் பாயிண்ட்) வரையிலான மொத்த பயணத்திற்கு சுமார் நான்கு மாதங்கள் வரை ஆகக்கூடும் என இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
ஆதித்யா எல்1 விண்கலம் ஒட்டுமொத்தமாக ஏழு உபகரணங்களை சுமந்து சென்று சூரியனின் போட்டோஸ்பியர் மற்றும் குரோமோஸ்பியர் என அறியப்படும் சூரியனின் வெளிப்புற அடுக்குகள் மற்றும் மின்காந்த துகள்களை கண்டறிந்து அவை குறித்து ஆராயவும், கண்காணிக்கும் பணியில் ஈடுபடும் என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
மேலும் சூரியனின் செயல்பாடுகள் மற்றும் விண்வெளி வானிலையில் அதன் தாக்கத்தை கண்கானிக்கவும் ஓசோன் படலத்தால் தடுத்து நிறுத்தப்படும் சூரிய கதிர்வீச்சு கட்டுப்படுத்துதல் குறுத்து ஆய்வு செய்ய ஆதித்த எல்1 விண்கலம் முக்கிய பங்காற்றும் என இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் கூறி உள்ளனர். ஏறத்தாழ 380 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆதித்யா எல்1 விண்கலம் தயாராகி இருப்பதாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனிடையே ஆதித்யா எல்1 விண்கலம் விண்ணில் பாய்வதை காண முன்பதிவு செய்யலாம் என்று இஸ்ரோ அறிவித்து இருந்தது. அதன்படி, இன்று (செப். 2) விண்ணில் பாயும் ஆதித்யா எல்1 விண்கலத்தைக் காண 10 ஆயிரம் பேர் வரை முன்பதிவு செய்து உள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : World Vulture Awareness Day : பறவைகளின் அரசன் "பாறு கழுகு"... அழிவில் இருந்து மீளுமா! அழிவிற்கு என்ன காரணம்?