ஹைதராபாத்: கடந்த ஆகஸ்ட் 23 அன்று நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக ஆந்திராவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் நிலவில் காலூன்றியது. இதன் மூலம், நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக சென்ற முதல் நாடு என்ற பெருமையை இந்தியா அடைந்தது. இதனையடுத்து, சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டரும் பிரிந்து சென்று தனது ஆய்வுப் பணியைத் தொடங்கியது.
இந்த நிலையில், தென் ஆப்பிரிக்கா மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு இருந்த பிரதமர் மோடி, இன்று இஸ்ரோ மையத்திற்கு வந்து சந்திரயான் 3 விண்கலத்தின் வெற்றிக்கு உறுதுணையாக செயல்பட்ட இஸ்ரோ தலைவர் சோம்நாத், சந்திராயன் 3 விண்கலத்தின் செயல்திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் உள்ளிட்ட அனைத்து விஞ்ஞானிகளையும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
அது மட்டுமல்லாமல், நிலவில் சந்திரயான் 3 விண்கலத்தில் விக்ரம் லேண்டர் தடம் பதித்த இடம் ‘சிவசக்தி’ (Shivshakti) என்றும், ஆகஸ்ட் 23 அன்று இனி தேசிய விண்வெளி தினம் (National Space Day) கொண்டாடப்படும் எனவும் பிரதமர் அறிவித்தார். இந்த நிலையில், ஒரு பக்கம் விக்ரம் லேண்டர் மற்றும் ரோவரின் பணிகளை உன்னிப்பாக கவனித்து வரும் இஸ்ரோ, தனது அடுத்த இலக்கை நோக்கியும் தனது பணியைத் தொடங்கி உள்ளது.
அந்த வகையில், இஸ்ரோ அடுத்ததாக சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்1 (Aditya-L1) என்ற விண்கலத்தை செலுத்த தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் விண்வெளி அமைப்பில் இருந்து இந்தியாவில் இருந்து முதன் முறையாக சூரியனை ஆய்வு செய்ய விண்கலம் அனுப்பப்பட உள்ளது.
இந்த விண்கலத்தின் மூலம் சூரியனில் இருந்து எல் 1-ஐச் சுற்றி உள்ள வட்டப்பாதையை ஆய்வு செய்ய முடியும். இந்த விண்கலம் சூரியனின் போட்டோஸ்பியர், குரோமோஸ்பியர் உள்பட பல்வேறு அலைவரிசைகளை ஆய்வு செய்வதற்காக 7 பேலோடுகளை சுமந்து செல்ல இருப்பதாகவும் தெரிகிறது. இந்த ஏழு பேலோடுகளில் 4 சூரியனை நேராக பார்க்கவும், மற்ற 3 பேலோடுகளை எல் 1 சுற்றுவட்டப் பாதையில் உள்ள துகள்களைப் பற்றி ஆராயவும் உதவும்.
மேலும், இந்த விண்கலத்தில் அமைக்கப்பட உள்ள புலப்படக் கூடிய எமிஷன் கொரோனாகிராப் பேலோடை பெங்களூருவைச் சார்ந்த இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் வானியற்பியல் நிறுவனமும் (Indian Institute of Astrophysics), சூரிய அல்ட்ரா இமேஜர் பேலோடை புனேவைச் சேர்ந்த வானியல் மற்றும் வானியற்பியலுக்கான இண்டர் பல்கலைக்கழக மையமும் (Inter-University Centre for Astronomy and Astrophysics) தயார் செய்து உள்ளது.
எல் 1 சுற்றுவட்டப் பாதையைச் சுற்றி உள்ள ஹாலோ வட்டப் பாதையை அடைவதற்காக தூசுகளைக் கண்டறியும் கண்டுபிடிப்பான்கள் மற்றும் காந்த மீட்டர் பேலோடு ஆகியவை பயன்படுத்தப்பட உள்ளது. இதற்கான செயற்கைக்கோள் யு ஆர் செயற்கைக்கோள் மையத்தில் இருந்து இரண்டு வாரங்களுக்கு முன்னதாக ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் விண்வெளித் தளத்திற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.
இந்த விண்கலம் வருகிற செப்டம்பர் 2 அன்று விண்ணில் செலுத்த உள்ளதாக இஸ்ரோ அதிகாரி ஒருவர் கூறி உள்ளார். இவ்வாறு விண்ணில் செலுத்தப்பட உள்ள விண்கலம், சூரிய - புவி அமைப்பில் உள்ள எல் 1 சுற்றுவட்டப் பாதையைச் சுற்றி உள்ள ஹாலோ ஆர்பிட்டில் நிலைநிறுத்தப்படும். இதனால், சூரிய மறைவு மற்றும் கிரகணங்கள் ஆகியவற்றில் இருந்து வெளியேறி, சூரியனைப் பற்றி தொடர்ந்து ஆய்வு செய்ய முடியும்.
ஆதித்யா எல் 1-இன் நோக்கம் என்ன? சூரியனின் மேல் வளிமண்டலப் பகுதிகளான குரோமோ மண்டலம் மற்றும் கொரோனா ஆகியவற்றின் பரிமாணங்கள், பிளாஸ்மாவின் இயற்பியல் தன்மை, அதிகப்படியான கொரோனல் வெளிப்பாடு, எரிப்பு ஆகியவற்றை பற்றி அறிய முடியும். அது மட்டுமல்லாமல், சூரிய கொரோனா மற்றும் அதன் வெப்பச் செயல்பாடு, வெப்பநிலை, அடர்த்தி, வேகம் ஆகியவற்றை அறிய முடியும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: Chandrayaan 3: விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்திற்கு பெயர் 'சிவசக்தி' : பிரதமர் மோடி அறிவிப்பு!