திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் (இஸ்ரோ) வாயுக்களை திரவமாக்கி அவற்றை எரிபொருளாக மாற்றும் கிரயோஜெனிக் தொழில்நுட்ப விண்வெளி அறிவியலாளராக பணியாற்றி வந்தார் நம்பி நாராயணன். 1994ஆம் ஆண்டில் இஸ்ரோ மையத்தை வேவு பார்த்து, கிரயோஜெனிக் ராக்கெட் என்ஜின் தயாரிப்பு உள்ளிட்ட சில முக்கிய ரகசியங்களை வெளிநாடுகளுக்கு விற்றதாக நம்பி நாராயணன் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரத்தில், நம்பி நாராயணனை கைது செய்து, கேரள காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில், ஏறத்தாழ இரண்டு மாதங்கள் நம்பி நாராயணன் சிறையில் இருந்தார். இதற்கிடையே, இந்த வழக்கு, மத்திய குற்றப்புலனாய்வு அமைப்புக்கு (சி.பி.ஐ) மாற்றப்பட்டது. சி.பி.ஐ விசாரணையில், நம்பி நாராயணன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை என கண்டறியப்பட்டது.
நம்பி நாராயணன் பல்வேறு சட்டப்போராட்டம் நடத்திய பிறகு, அவர் மீதான குற்றச்சாட்டை 1996ஆம் ஆண்டு சிபிஐ தள்ளுபடி செய்தது. அதனைத் தொடர்ந்து 1998 ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றம் நம்பி நாராயணன் நிரபராதி எனத் தீர்ப்பளித்தது. பின்னர் மீண்டும் இஸ்ரோவில் இணைந்து பணியாற்றிய நம்பி நாராயணன் 1999ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
உடல் மற்றும் மனதளவால் பாதிப்பிற்குள்ளான நம்பி நாராயணன், இந்த சதி வழக்கு தொடர்பில் விசாரணை நடத்திட வேண்டுமென கோரியதன் அடிப்படையில், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி டி.கே.ஜெயின் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
திருவனந்தபுரத்தில் உள்ள கேரள மாநில அரசின் செயலகத்தில் நீதிபதி டி.கே.ஜெயின் ஆணையம் இன்று (டிச.15) தனது விசாரணையைத் தொடங்கியது. விசாரணை ஆணையம் முன்பாக ஆஜரான நம்பி நாராயணன் தனது சாட்சியத்தை இன்று பதிவு செய்தார்.
இஸ்ரோ உளவு வழக்கில் விசாரணை அலுவலர்களாக பணியாற்றிய முன்னாள் காவல் ஆய்வாளர் சிபி மேத்யூஸ், கே.கே. ஜோசுவா, எஸ்.விஜயன் உள்ளிட்டவர்களிடம் இந்த ஆணையம் விரைவில் விசாரணை மேற்கொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க : கேரளாவிலிருந்து கடத்தப்பட்ட 20 டன் கடற்சிப்பிகள் பறிமுதல்