டெல்லி : வரும் ஜூலை 13ஆம் தேதி சந்திரயான் -3 விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்து உள்ளது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் வைத்து வரும் ஜூலை 13ஆம் தேதி மதியம் 2.30 மணி அளவில், LVM2 ராக்கெட் மூலம் சந்திராயன் -3 விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். புரபல்சன் மாட்யூல் எனப்படும் உந்துவிசை சக்தி மூலம் விண்கலத்தின் லேண்டர் மற்றும் ரோவர் கருவிகள் 100 கிலோ மீட்டர் தொலைவிலான நிலவின் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்படும் என்றும் நிலவில் இருந்து பூமிக்கான துருவ அளவீடுகள் மேற்கொள்ளப்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
நிலவு குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட உள்ள சந்திரயான் -3 விண்கலத்தின் சோதனை ஓட்டங்கள் திட்டமிட்டபடி நடந்தால் வரும் ஜூலை 12 முதல் 19 ஆம் தேதி ஆகிய இடைப்பட்ட காலத்திற்குள் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், யு.ஆர் ராவ் செயற்கைக்கோள் மையத்தில் இருந்து ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள ஏவுதளத்தை சந்திரயான் -3 விண்கலம் ஏற்கனவே அடைந்து விட்டதாகவும் இறுதி ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் இறுதிக் கட்ட பணிகள் இம்மாத இறுதிக்குள் நிறைவடையும் என்றும் சந்திரயான் -3 விண்கலத்தை எல்விஎம்-3 என்ற ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்துவதற்கான பணிகள் நடந்து வருவதாக கூறினார். அதற்கான அனைத்து பகுதிகளும் ஸ்ரீஹரிகோட்டாவை அடைந்துள்ளதாகவும் ஜூலை 12 மற்றும் 19 ஆகிய தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணில் ஏவப்படுஇம் என்று கூறினார்.
விண்கலத்தை ஏவுவதில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக, சந்திரயான் -3 விண்கலத்தில் அதன் வன்பொருள், கட்டமைப்பு, கணினிகள், மென்பொருள் மற்றும் சென்சார்களில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், விண்கலத்தில் அதிக எரிபொருள் சேர்க்கப்பட்டது மற்றும் நிலவும் தரையிறங்கும் போது உறுதியாக இருக்க ரோபோவின் கால்கள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சோம்நாத் கூறினார்.
மேலும், அதிக ஆற்றலை உற்பத்தி செய்யும் பெரிய சோலார் பேனல்கள் கருவியில் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அதற்காக கூடுதல் சென்சார்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும் விண்கலத்தின் வேகத்தை அளவிட, கடந்த காலங்களில் உருவாக்கப்பட்ட லேசர் டாப்ளர் வெலோசிமீட்டர் கருவி இணைக்கப்பட்டு உள்ளதாக அவர் கூறினார்.
மேலும் திட்டமிட்ட இடத்தில் தரையிறங்குவதில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் மற்றொரு பகுதியில் விண்கலம் தரையிறங்குவதற்கு உதவியாக புதிய மென்பொருள் இணைக்கப்பட்டு உள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.
இதையும் படிங்க : உலக பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியல்: சாதனை படைத்த இந்திய பல்கலைக்கழகங்கள்!