ஹைதராபாத்: சந்திரயான்-1 திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, கடந்த 2019ஆம் ஆண்டு சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட இந்த விண்கலம் நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக பயணித்த போதும், தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டு அத்திட்டம் தோல்வியடைந்தது.
இதையடுத்து, சந்திரயான்-3 திட்டத்திற்கான பணிகளில் இஸ்ரோ ஈடுபட்டது. சந்திரயான்-2 விண்கலத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் அனைத்தையும் கலைந்து, மேம்படுத்தப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தை இஸ்ரோ உருவாக்கியது. சுமார் 615 கோடி ரூபாய் செலவில் இந்த விண்கலம் உருவாக்கப்பட்டது.
சந்திரயான்-3 விண்கலம், கடந்த ஜூலை 14ஆம் தேதி, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, எல்விஎம்-3 எம்-4 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலம் கடந்த 5ஆம் தேதி நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழைந்தது. அதன் பிறகு, சுற்றுப்பாதையின் உயரத்தை படிப்படியாக குறைத்து, நிலவின் மேற்பரப்பில் விண்கலத்தை மெதுவாக தரையிறக்குவதற்கான பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டனர்.
தற்போது நிலவுக்கு மிகவும் நெருக்கமான சுற்றுப்பாதையில் சந்திரயான்-3 லேண்டர் உள்ளது. இன்று மாலை 6 மணியளவில் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் தரையிறக்கப்பட உள்ளது. இதற்கிடையில், சந்திரயான்-3 விண்கலம் திட்டமிட்டபடி இன்று தரையிறங்குவதற்கான சாதகமான சூழல் இல்லாவிட்டால், லேண்டரை தரையிறக்கும் நடவடிக்கை வரும் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படும் என இஸ்ரோவின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியிருந்தார்.
இந்த கருத்து குறித்து இஸ்ரோ தலைவர் சோமநாத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சோம்நாத், திட்டமிட்டபடி இன்று மாலையில் லேண்டர் தரையிறக்கப்படும் என தெரிவித்தார். மேலும், லேண்டரின் செயல்பாடுகள் ஆரோக்கியமாக இருப்பதாகவும், சூழலை தாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
லேண்டர் தரையிறங்கும் பகுதியை தொடர்ந்து படம்பிடித்து அனுப்பி வருவதாகவும், அதனை வைத்து தரையிறங்கும் பகுதியின் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். லேண்டரில் பொருத்தப்பட்டுள்ள இந்த அதிநவீன கேமரா எடுத்து அனுப்பும் புகைப்படங்கள், தரையிறங்கும் பகுதியில் ஏதேனும் கற்பாறைகள், பள்ளங்கள் இருக்கிறதா? என கண்டுபிடிக்கவும், தரையிறங்குவதற்கு ஏற்ற பாதுகாப்பான பகுதியை கண்டறியவும் உதவும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.