டெல்லி: நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களை மேம்படுத்துவதற்காக "உயர் சிறப்புக் கல்வி நிறுவனம்" (Institutions of Eminence) என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த 2016ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவித்தது. இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் கல்வி நிறுவனங்களின் மேம்பாட்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி மற்றும் பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதேபோல், இந்நிறுவனங்களின் கல்வி மற்றும் நிர்வாகம் தன்னாட்சி பெற்றதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, முதற்கட்டமாக இத்திட்டத்தின் கீழ் உயர் சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்காக மொத்தம் 20 உயர் கல்வி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன. பத்து தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் பத்து அரசு கல்வி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதன் அடிப்படையில், டெல்லி ஐஐடி, மும்பை ஐஐடி, இந்திய அறிவியல் கழகம் பெங்களூரு ஆகிய மத்திய அரசின் கல்வி நிறுவனங்களுக்கு உயர் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. அதன் பிறகு, டெல்லி பல்கலைக்கழகம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், ஹைதராபாத் பல்கலைக்கழகம், சென்னை ஐஐடி, ஐஐடி காரக்பூர் ஆகியவற்றிற்கு உயர் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது.
இந்த வரிசையில் தமிழ்நாட்டில் உள்ள அண்ணா பல்கலைக்கழகமும், மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகமும் "உயர் சிறப்புக் கல்வி நிறுவனம்" திட்டத்தின் கீழ் மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்டன. இந்த இரண்டும் மாநில அரசின் கல்வி நிறுவனங்கள் என்பதால், இந்த உயர் சிறப்பு அந்தஸ்தை பெற மாநில அரசு பாதி நிதியை வழங்க வேண்டும் என கூறப்பட்டது. இது தொடர்பாக ஆய்வு செய்து முடிவு எடுக்க தமிழ்நாடு அரசு குழுவை அமைத்தது.
இந்தக் குழு, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என கடந்த 2020ஆம் ஆண்டு முடிவு எடுத்தது. இந்த சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டால் தமிழ்நாட்டில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் சிக்கல் ஏற்படும் என கல்வியாளர்கள் கூறியதாலும், அண்ணா பல்கலைக்கழகம் நிதி சிக்கலில் இருப்பதால் சிறப்பு அந்தஸ்து பெற மத்திய அரசுக்கு நிதி வழங்க முடியாது என்பதாலும் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என முடிவு செய்யப்பட்டது.
மேலும், நிதிநிலை காரணமாக அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கும் மசோதாவையும் தமிழ்நாடு அரசு கடந்த 2020ஆம் ஆண்டு பேரவையில் நிறைவேற்றியது. இதேபோன்று, மேற்குவங்க மாநில அரசும் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து பெற நிதி வழங்க மறுத்துவிட்டது.
இந்த நிலையில், 'உயர் சிறப்புக் கல்வி நிறுவனம்' திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட அண்ணா பல்கலைக்கழகம், ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், டெல்லியின் ஜாமியா ஹம்தார்ட் பல்கலைக்கழகம் ஆகியவற்றிற்கு உயர் சிறப்பு அந்தஸ்து வழங்கக்கூடாது என யுஜிசி மற்றும் நிபுணர் குழு மத்திய கல்வி அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் தமிழக அரசு ஏற்கனவே பின்வாங்கிவிட்டது என்றும் நிபுணர் குழு குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு இன்னும் எந்தவித முடிவும் எடுக்கவில்லை என மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.