வறட்சிப் பாதையில் இந்தியா
இன்று, நமது பரந்து விரிந்த இந்திய நாட்டின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள், மிகக் கடுமையான வறட்சியை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, தமிழ்நாடு, ஒடிசா, கேரளா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், குஜராத், பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.
நாட்டில் உள்ள பத்து மாநிலங்களில், சுமார் 254 மாவட்டங்கள் ஆண்டுதோறும் கடும் வறட்சியை சந்திக்கின்றன. ஏற்கனவே, இதுகுறித்து இந்தியப் புவியியல் விஞ்ஞானிகள் நிகழும், நிகழப்போகும் வறட்சி குறித்து விவரித்துள்ளனர். பசுமை இல்ல வாயுக்களில் தொடங்கி கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீரை குடிக்கும் தொழிற்சாலைகள் வரை மனிதர்களால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகள் முன்பு எந்த நூற்றாண்டுகளிலும் இல்லாத வறட்சியை இந்த நூற்றாண்டில் அளித்துள்ளது.
இதே நிலை நீடித்தால் அடுத்த நூற்றாண்டு வரை நாம் தாக்குபிடிப்போமா என்ற கேள்வி எழுகிறது. மத்திய நீர்வள அமைச்சகப் பதிவுகளின் படி, 2050ஆம் ஆண்டளவில், இந்தியாவில் உள்ள 79 விழுக்காடு நீர்நிலைகள் தண்ணீரை தக்க வைத்துக்கொள்ளும் தன்மையிலிருந்து மாறுபட போகிறது. இதன் விளைவுகள் நீராதாரச் சுற்றுச்சூழலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
இந்தாண்டு, ஏப்ரல் 13ஆம் தேதி வரையிலான தரவுகளின்படி நாட்டிலுள்ள 91 பெரிய நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்கலன் மதிப்பு 157.799 பில்லியன் கன மீட்டர். ஆனால், அவற்றில் தற்போது வெறும் 35.839 பில்லியன் கன மீட்டர் தண்ணீர் மட்டுமே இருப்பில் உள்ளது. இந்த அளவும் கடந்தாண்டை விட குறைவுதான்.
அதுமட்டுமல்லாமல் மற்றொரு அறிக்கையின்படி, நாட்டிலுள்ள 40 விழுக்காடு கிணறுகள், அவற்றின் சராசரி அளவைக் காட்டிலும் மிகக் குறைவான தண்ணீரையே தக்கவைத்துக்கொண்டுள்ளன. அத்துடன் 10 விழுக்காடு கிணறுகள் தண்ணீரே இல்லாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
இதன்காரணமாக மத்திய அரசு, நதிகள் இணைப்பு திட்டத்தினை கையில் எடுத்தது. இதற்கு முதல்கட்டமாக மத்திய நீர்வள அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய நீர் மேம்பாட்டு அமைப்பிடம், இமயமலைப் பிராந்தியத்திற்கான 14 நதிகள் இணைப்பு திட்டங்கள் மற்றும் தீபகற்ப பிராந்தியத்திற்கான 16 நதிகள் இணைப்புத் திட்டங்கள் குறித்த விரிவான ஆய்வறிக்கையை தயார் செய்ய ஆணையிட்டது.
இமயமலைய நதிகள் இணைப்புத் திட்டங்கள்
- காக்ரா - யமுனா நதிகள் இணைப்பு திட்டம்
- சர்தா - யமுனா நதிகள் இணைப்பு திட்டம்
- ராஜஸ்தான் - சபர்மதி நதிகள் இணைப்பு திட்டம்
- மானஸ்- சங்கோஸ் - தீஸ்தா நதிகள் இணைப்பு திட்டம்
- ஜோகிகோபா - தீஸ்தா - பரக்கா நதிகள் இணைப்பு திட்டம்
- கங்கா-தாமோதர்-சுபர்ணரேகா நதிகள் இணைப்பு திட்டம்
- சுபர்ணரேகா-மகாநதி நதிகள் இணைப்பு திட்டம்
- பரக்கா - சுந்தர வன நதிகள் இணைப்பு திட்டம்
- கந்தக்-கங்கா நதிகள் இணைப்பு திட்டம்
- ராஜஸ்தான் - யமுனா நதிகள் இணைப்பு திட்டம்
- சேன் நதிகள் இணைப்பு திட்டம்
- சோன் அணை-தெற்கு துணை நதிகள் இணைப்பு திட்டம்
- கோசி-காக்ரா நதிகள் இணைப்பு திட்டம்
- கோசி- மெச்சி நதிகள் இணைப்பு திட்டம்
இத்திடங்களால் ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், குஜராத், பஞ்சாப், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் உள்ள வறண்ட பகுதிகளுக்கு தண்ணீரை எடுத்துச் செல்ல முடியும். மானாவாரிப் பயிர்கள் சாகுபடி இயல்பை காட்டிலும் அதிகமாக விளையும். உள்நாட்டு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யலாம்.
தீபகற்ப நதிகள் இணைப்புத் திட்டங்கள்
- மகாநதி-கோதாவரி-கிருஷ்ணா-பெண்ணாறு-காவிரி நதிகள் இணைப்பு திட்டம்
- பர்-டபி-நர்மதா நதிகள் இணைப்பு திட்டம்
- கென்-சம்பல் நதிகள் இணைப்பு திட்டம் அத்துடன் அவற்றின் கிளை ஆறுகள்.
மேற்கூறிய திட்டங்களில் பல திட்டங்களுக்கு முழுமையான ஆய்வறிக்கை மத்திய நீர்வள அமைச்சத்திடம் தாக்கல் செய்யப்படுவிட்டன. அதைத் தொடர்ந்து நதிகள் இணைப்புத் திட்டத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பாகங்களாக தீபகற்ப மாநிலங்களுக்கான திட்டங்களுக்கும் ஆவணங்கள் தயாரிக்கப்பட்டன.
இவற்றில், பர்-டபி-நர்மதா நதிகள் இணைப்புத் திட்டப் பணிகள் குஜராத்தில் தொடங்கப்பட்டுவிட்டன. அதற்கு முதல்கட்டமாக ரூ.2,800 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதையடுத்து மகாநதி-கோதாவரி-கிருஷ்ணா-பெண்ணாறு-காவிரி இணைப்புத்திட்டத்திற்கு 2004-2005ஆம் ஆண்டில் சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு சுற்றுக்கு அனுப்பப்பட்டது.
அதையடுத்து நதிகள் இணைப்பு பணிக்குழு குழு அமைக்கப்பட்டு, கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி அதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது. இதற்கான கூட்டத்தில் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களும், மத்திய ஜல் சக்தி ஆலோசகர் வேதிர் ஸ்ரீராம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதன்படி கோதாவரி-காவேரி நதிகள் இணைக்கும் திட்டம், ஈஞ்சம்பள்ளியிலிருந்து(தெலங்கானா) செயல்படுத்த தேசிய நீர் மேம்பாட்டு அமைப்பு (NWDA) முடிவு செய்துள்ளது. விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளன.
நதிகள் இணைப்பு திட்டத்தினால் நமக்கு கிடைக்கபோவது என்ன மற்றும் அதனால் நாம் இழக்கப் போவது என்ன?
சாதகங்கள்
வெள்ளக் கட்டுப்பாடு மற்றும் வறட்சி குறைப்பு
தேசிய நீர் மேம்பாட்டு அமைப்பின் கூற்றுப்படி, இந்தியாவில் ஆண்டுதோறும் 70 லட்சம் ஹெக்டேர் நிலம், 30 லட்சம் ஹெக்டேர் பரப்பளவு பயிர்கள் புயல்களால் நாசாமாகின்றன. முக்கியமாக கிழக்கு மாநிலங்களில் ஆண்டுக்கு ரூ.1000 கோடிக்கு மேல் சேதம் ஏற்படுகிறது.
இதனை ஆறுகள் இணைப்புத் திட்டத்தின் மூலம் எளிதாக குறைக்க முடியும். அதவாது ஆறுகளை இணைத்து நீர்த்தேக்கங்களில் கூடுதலான தண்ணீரை திருப்பிவிட முடியும். அவற்றை நீர்த்தேக்கங்களில் சேகரித்து கால்வாய்கள் மூலம் குறந்த பட்சம் 12 கிமீ வரையிலும் உள்ள வறண்டப் பகுதிகளுக்கு தண்ணீர் வழங்க முடியும்.
அத்துடன் உள்நாட்டு மற்றும் தொழில்துறைகளுக்கு தண்ணீர் கிடைக்கச் செய்ய முடியும். அதனால் உற்பத்தியை பெருக்கலாம். அத்துடன் வெள்ளச் சேதங்களை 35 விழுக்காடு குறைக்கலாம். பெருமளவு வறட்சி குறையும்.
நீர்ப்பாசனம், உணவு பாதுகாப்பு
உலகின் மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவிற்கு கூடுதலாக நீர்ப்பாசனம் தேவைபடுகிறது. குறிப்பிட்டுச் சொன்னால், உலக சராசரி நீர்பாசன விழுக்காடு 69 ஆகும். ஆனால் இந்தியாவிற்கு 83 நீர்பாசன விழுக்காடு தேவைப்படுகிறது. அதிகரித்துவரும் மக்கள் தொகை இந்த விழுக்காட்டை இன்னும் அதிகரிக்க கூடும்.
தற்போதுள்ள மக்கள்தொகையின் அடிப்படையில், 2050ஆம் ஆண்டுக்குள் 150 முதல் 180 கோடி மக்களுக்கு ஆண்டுதோறும் சுமார் 4.5 கோடி லட்சம் டன் உணவை நாம் உற்பத்தி செய்யவேண்டும். அதற்கு தற்போதுள்ள விவசாய நிலங்களை விட கூடுதலாக 6 கோடி ஹெக்டேர் நிலங்கள் தேவை.
இதனை நதிநீர் இணைப்பு திட்டங்கள் மூலம் 3.5 கோடி முதல் 4.5 கோடி ஹெக்டேராக அதிகரிக்க முடியும். அதில், 2.5 கோடி ஹெக்டேருக்கு நதிநீர் பாசமும், 1 கோடி ஹெக்டேருக்கு நிலத்தடி நீர் பாசனமும் கிடைக்ககூடும்.
உள்நாட்டு குடிநீர் தேவை
1951 முதல் 2000 வரையிலான 50 ஆண்டுகளில் மக்கள்தொகைக்கு ஏற்ப தனிமனித தண்ணீர் பயன்பாட்டின் அளவு 3,450 கன மீட்டரிலிருந்து 1250 கன மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது. அடுத்த 50 ஆண்டுகளில் நமக்கு கூடுதலாக 760 கன மீட்டர் தண்ணீர் தேவை உள்ளது. இதனை நாம் நதிநீர் இணைப்பு திட்டங்கள் மூலம் பூர்த்தி செய்துகொள்ள முடியும்.
கூடுதல் நன்மைகள்
நதிகள் இணைப்பு மூலம் ஆண்டுதோறும் நீர்த்தேக்கங்களில் தண்ணீர் வற்றாமல் பார்த்துகொள்ள முடியும். இதனால் நன்னீர் சுழற்சி அதிகரிக்கிறது. அதன்காரணமாக நிலத்தடி நீரின் உப்புத்தன்மை குறையும். நன்னீர் உயிரினங்களின் இனப்பெருக்கம் அதிகரிக்கும். நன்னீர் மீன்வளம் சார்ந்த தொழில்கள் பெருகும். அத்துடன் புதிய நீர் வழித்தடங்களை உருவாக்கலாம். அதன் காரணமாக எரிபொருள் பயன்பாடு சுமாராக குறைக்கப்படும். காற்று மாசுபாடும் குறையும்.
பாதங்கள்
பொருளாதாரம்
பொருளாதார ரீதியாக நதிகள் இணைப்புத் திட்டத்துக்கு, மத்திய அரசின் முதல்கட்ட நிதி மதிப்பீடு 5 லட்சம் கோடிகள். மொத்த மதிப்பீடு 10 லட்சம் கோடிக்கும் மேல் இருக்கலாம். அதையடுத்து அவற்றை பராமரிக்கும் செலவுகளே ஆண்டுக்கு சுமார் 1.5 லட்சம் கோடிகளை எட்டும். அதன் செலவில் பாதி அளவு இருந்தாலே, இந்தியாவில் உள்ள அனைத்து நீர் நிலைகளையும் தூர்வாரிவிட முடியும்.
சமூகம்
ஒவ்வொரு நதிகளையும் இணைக்க வேண்டுமென்றால், அதற்காக பெருமளவு நிலங்கள் கையகப்படுத்தப்படும். பல்லாயிரக்கணக்கான கிராமக்கள் அடையாளம் தெரியாமல் அழிந்துபோகும். அதிலிருக்க கூடிய வளங்கள் அழிக்கப்படும். குறிப்பாக அவற்றில் வசிக்கக் கூடிய மக்கள் வெளியேற்றப்படுவார்கள்.
அப்படி வெளியேற்றப்படுபவர்களின் எண்ணிக்கை 80 லட்சம் முதல் ஒரு கோடி வரை இருப்பார்கள். அவர்களின் நிலை கேள்விக் குறியாகிவிடும். ஒரு வேளை அவர்களுக்கு மாற்று இடம், நிவாரணம் வழங்கினால் கூட அதற்காக பெருமளவு நிதியை ஒதுக்க வேண்டியிருக்கும். அத்துடன் வனவிலங்கு சரணாலயங்கள், கனிம வளங்கள் நீரில் மூழ்கும்.
கழிமுகம் (Estuaries)
ஆறுகள் கடலில் கலக்கும் இடங்களில் மீன்கள், கடல்வாழ் தாவரங்கள், சிப்பிகள் உள்ளிட்ட பல்வகை கடல்சார் உயிரினங்கள் இனப் பெருக்கம் செய்கின்றன. அவற்றை ஆதாரமாகக் கொண்டு லட்சக்கணக்கான மீனவர்கள், பறவைகள், தாவரங்கள் உள்ளன. அவை சிறுக் குறு வர்த்தக மையங்களாக இருக்கின்றன. இதனை கழிமுகம் என்றழைக்கிறோம். இது ஒரு இயற்கையான நிகழ்வு. இதனை ஆறுகள் இணைப்பு திட்டத்தால் மாற்றக் கூடாது. அப்படி மாற்றினால் கடல்சார் சூழ்நிலையில் பெரும் மாற்றம் நிகழக்கூடும்.
தக்காண பீடபூமி
இந்தியவிலுள்ள மேற்கு தொடர்ச்சி மலைத் தொடர், கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடர் அத்துடன் விந்திய மலைத்தொடர் இந்த மூன்றையும் இணைக்கும் பகுதி தக்காண பீடபூமி என்றழைக்கப்படுகிறது. இவற்றிக்கு மேட்டுப் பகுதி நிலங்கள் என்றப் பெயரும் உண்டு. ஒரு மேட்டுப் பகுதி நிலத்தில் உள்ள ஆற்றை தாழ்வான பகுதியிலுள்ள ஆற்றுடன் இணைக்கலாம்.
ஆனால், அதற்கு மாறாக தாழ்வான பகுதியிலுள்ள ஆற்றை மேட்டுப் பகுதி ஆற்றுடன் இணைக்க முற்படுவது மிகப் பெரும் பணி. நதிகள் இணைப்பு திட்டத்தில் பெருமளவு நதிகள் இப்படி உள்ளன. அதனால் அதிகளவில் மலைகளை குடைய வேண்டியிருக்கும். அதனால் மலைச் சரிவுகள் ஏற்படும். அவை மலைத்தொடர்களில் வாழக்கூடிய பழங்குடியினர், பல்வகை உயிரினங்களை பாதிக்கும்.
உள்நாடு மற்றும் அண்டை நாடுகள்
ஒரு நதியானது ஒரு மாவட்டத்தில் தொடங்கி அம்மாவட்டதிலேயே முடிவதில்லை. அவை மாநிலம், நாடு, அண்டை நாடு என நீண்டு கொண்டே சென்று கடலில் கலக்கிறது. அப்படி வடக்கே இமய மலையில் உருவாகும் சிந்து, கங்கை, பிரம்மபுத்ரா மற்றும் அவற்றின் கிளை நதிகள் அண்டை நாடுகளான நேபாளம், பங்களாதேஷ், பாகிஸ்தான் வரை நீளுகின்றன. அதேபோல உள்நாட்டு நதிகள் பல்வேறு வடக்கு, தெற்கு மாநிலங்களை இணைக்கும் பாளங்களாக உள்ளன.
அவற்றை எல்லாம் இணைக்கும் முயற்சி, நாடு மாநிலங்களுக்கிடையே பாகப்பிரிவினையை ஏற்படுத்தும். இதற்கு பல கட்டப் பேச்சு வார்த்தைகள், ஒப்பந்தங்கள், விதிமுறைகள், கட்டுப்பாடுகள் தேவை. இத்திட்டங்கள் முழுமையாக செயல்பட 50 ஆண்டுகள் பிடிக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் ஆட்சி மாற்றமும் ஒரு சிக்கலாக இருக்கலாம்.
இத்திட்டங்கள் செயல்படாவிட்டால், அடுத்த 50 ஆண்டுகளில் மிகப் பெரும் வறட்சியை நாம் சந்திக்க நேரிடும் என்கிறது மத்திய நீர்வள மேம்பாட்டு அமைச்சகத்தின் அறிக்கை. ஆனால், நாடு முழுவதும் ஒராண்டில் பெய்யும் மழையின் டிஎம்சி அளவில், கால் பகுதியைக் கூட நாம் சேமித்து வைப்பதில்லை என்கிறது மற்றொரு அறிக்கை.
எடுத்து காட்டாக சென்னையில் வெள்ளத்தின் போது சுமார் 350 டிஎம்சி தண்ணீர் கடலில் கலந்திருக்கிறது. ஆனால், சென்னையின் ஓராண்டு தண்ணீர் தேவை 10 டிஎம்சி மட்டுமே. இதற்கெல்லாம் காரணம் ஏரி, குளங்கள் தூர்வாராமலிருப்பது, ஆறுகள் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட காரணங்கள்தான். இதேபோல கிராமம், மாவட்டம், மாநிலம் என்று எடுத்துக்கொண்டால் எவ்வளவு தண்ணீரை நாம் வீணாக்குகிறோம் என்று பாருங்கள்.
நாம் எதிர்காலத்திற்கு என்ன விட்டச் செல்லப்போகிறோம் என்பதில் கவனமாக இருக்கவேண்டும். அதிகரித்து வரும் இந்த நீர் நெருக்கடி இந்தியாவுக்கு மட்டுமல்ல, வேறு பல நாடுகளும் இதேபோன்ற பிரச்சினையை எதிர்கொள்ளப் போகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை, இந்தியா உள்பட சுமார் 54 நாடுகள் தண்ணீர் பிரச்சினையை திறம்பட எதிர்கொள்ள சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்காவிட்டால் 2050க்குள் கடுமையான கண்ணீப் நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிருக்கும் என எச்சரித்துள்ளது. இன்றைய நூற்றாண்டு செய்யப்பட்ட தவறுதல்களுக்கான தண்டனையை அடுத்த நூற்றாண்டில் வாழப்போகிறவர்கள் அனுப்பவிக்கும்படி செய்துவிடக்கூடாது. அரசு, திட்டங்கள் இவற்றைத் தவிர்த்து ஒவ்வொரு தனிமனிதனும் தண்ணீரை சேமிப்பதில் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டிய கட்டாயத்தில் தற்போது உள்ளோம்.
இதையும் படிங்க: நூறாண்டு கனவு: காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார் எடப்பாடி!