வாரணாசி: உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே, ஞானவாபி மசூதி உள்ளது. சில இந்து அமைப்புகள் மசூதியின் நிலத்துக்கு உரிமை கோரி வருகின்றன. மேலும், இந்த மசூதிக்குள் சிவலிங்க வடிவில் இருக்கும் பொருளின் வயதை கணக்கிட வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
சிவலிங்க உருவத்தில் இருக்கும் பொருளையும், அதன் பழமையையும் அறிவியல் பூர்வமாக ஆராய அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த மே 12ஆம் தேதி உத்தரவிட்டது. இதை எதிர்த்து மசூதி நிர்வாகம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் இன்று (மே 19) விசாரணைக்கு வந்தது.
அப்போது இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தடயவியல் சோதனை நடத்த இடைக்கால தடை விதிக்கப்படுவதாக உத்தரவிட்டனர். மேலும், "இது மிகவும் முக்கியமான விவகாரம் என்பதால் கூர்ந்து ஆராய வேண்டியுள்ளது. அடுத்த விசாரணையின் போது உத்தரவு பிறப்பிக்கப்படும்" என நீதிபதிகள் குறிப்பிட்டனர். மேலும் மத்திய அரசு, உத்தரபிரதேச மாநில அரசு, மனுதாரர்கள் விளக்கம் அளிக்க அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: காட்டெருமையைக் கண்டதும் சுட உத்தரவு - 3 பேரை கொன்றதால் ஆணை
முன்னதாக, வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலில் உள்ள சிங்காரக் கௌரி அம்மனை தினமும் வழிபட அனுமதி கோரி, பெண்கள் சிலர் வழக்கு தொடர்ந்தனர். அந்த சிலை மசூதியின் வளாகத்தின் சுவரில் அமைந்திருப்பதால் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் அம்மனை வழிபட அனுமதி வழங்கப்படுகிறது. இந்த வழக்கில் வாரணாசி சிவில் நீதிமன்றம், மசூதிக்குள் கள ஆய்வு நடத்த உத்தரவிட்டது.
பின்னர் நடத்தி முடிக்கப்பட்ட வீடியோ ஆய்வில், மசூதிக்குள் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. சிவலிங்கத்தின் பழமையை அறிய கார்பன் டேட்டிங் முறையில் பரிசோதனை செய்ய வேண்டுமென்று 5 இந்து பெண்கள் கோரிக்கை விடுத்தனர். மசூதிக்குள் இந்துக் கடவுள்களின் பல்வேறு சிலைகள் இருப்பதாகவும் குறிப்பிட்டனர். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மசூதி நிர்வாகம் முறையிட்ட நிலையில், வீடியோ ஆய்வுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஆய்வு முடிவில் மசூதிக்குள் சிவலிங்கம் போன்ற உருவம் இருப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதை ஏற்க மறுத்த மசூதி நிர்வாகம் அது சிவலிங்கம் இல்லை என்றும், செயற்கை நீரூற்று என்றும் விளக்கம் அளித்தது. பல்வேறு மசூதிகளில் இதுபோன்ற அமைப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் மத்திய அரசு மற்றும் உத்தரபிரதேச மாநில அரசின் விளக்கத்தை பொறுத்தே அடுத்தக்கட்ட நகர்வுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தடை செய்யப்பட்ட அமைப்பினர் குறித்த தகவலுக்கு ரூ.2 லட்சம் வெகுமதி அறிவிப்பு!