டெல்லி: இஸ்ரேலிய நிறுவனமான என்எஸ்ஓவின் பெகாசஸ் என்னும் உளவு மென்பொருளைக் கொண்டு உலக முழுவதும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் மூவர், மூத்த பத்திரிகையாளர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதி, ஆர்எஸ்எஸ் மூத்தத் தலைவர்கள் என 300-க்கும் மேற்பட்ட இந்தியர்களின் செல்போன்கள், இஸ்ரேலிய நிறுவனம் ஒன்றால் ஒட்டுகேட்கப்பட்டதாகத் தகவல் வெளியானதை அடுத்து, நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
செல்போன்களை சமர்ப்பிக்க வேண்டும்
இதுகுறித்து, விசாரிக்க மூன்று பேர் கொண்ட வல்லுநர் குழுவை நியமித்த உச்ச நீதிமன்றம் எட்டு வாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், முனைவர். நவீன் குமார் சௌத்ரி, முனைவர்.பிரபாகரன், முனைவர். அஸ்வின் அனில் குமாஸ்தே ஆகியோர் அடங்கிய வல்லுநர் குழு, தற்போது மக்களிடம் தகவல் கேட்டுள்ளது.
அந்தக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், "தங்கள் செல்போன் என்எஸ்ஓ நிறுவனத்தின் பெகாசஸ் மென்பொருளால் ஒட்டுக்கேட்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது என உரிய காரணங்களுடன் சந்தேகிப்பவர்கள், எங்களிடம் தகவல் அளிக்கலாம். அதன்படி, விசாரணைக்கு வருபவர்கள் தங்களின் செல்போனை ஆய்வுசெய்ய அனுமதிக்க வேண்டும்.
சந்தேகிக்கும் நபர்கள் செல்போன்களை டெல்லிக்கு அனுப்ப வேண்டும் எனவும், ஆய்வுக்கு பின் செல்போன்கள் மீண்டும் அளிக்கப்படும். மேலும், பெகாசஸ் மென்பொருளால் பாதிக்கப்பட்டிருப்பதாக சந்தேகிப்பவர்கள் வரும் ஜனவரி 7ஆம் தேதி மதியத்திற்கு முன் தகவல் அளிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க: RECAP 2021: 21 முக்கிய தேசிய நிகழ்வுகள் - ஒரு மீள்பார்வை