டெல்லி : உள் மற்றும் வெளி நாட்டு விமான போக்குவரத்தை விரிவுபடுத்த திட்டமிட்டு உள்ள இண்டிகோ விமான போக்குவரத்து நிறுவனம், 500 ஏர்பஸ் விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்து உள்ளது. விமான போக்குவரத்து துறையிலேயே இண்டிகோ நிறுவனம் கொடுத்து உள்ள ஆர்டர் தான் அதிகபட்ச கொள்முதல் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பட்ஜெட் விலையில் விமான சேவைகளை வழங்கி வரும் நிறுவனமாக இண்டிகோ விமான நிறுவனம் கருதப்படுகிறது. உள் மற்றும் வெளிநாடுகளுக்கு இண்டிகோ விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அண்மையில் ஆப்பிரிக்கா நாடுகளுக்கு விமான சேவைகளை விரிவுபடுத்தும் முயற்சியில் இண்டிகோ நிறுவனம் ஈடுபட்டது.
இந்நிலையில், உள் மற்றும் வெளிநாடுகளுக்கான விமான போக்குவரத்தை விரிவுபடுத்தும் விதமாக பிரான்சை சேர்ந்து விமான தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ்சிடம் 500 விமானங்களை புதிதாக இண்டிகோ நிறுவனம் ஆர்டர் கொடுத்து உள்ளது. வரும் 2030 மற்றும் 2035 ஆண்டுகளுக்குள் இந்த 500 விமானங்களை டெலிவிரி செய்யுமாறு ஏர்பஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் போட்டு உள்ளதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இந்த 500 விமான ஆர்டர் இண்டிகோ நிறுவனத்தின் மிகப்பெரிய ஆர்டர் மட்டுமின்றி, விமான போக்குவரத்து துறையிலேயே ஏர்பஸ் நிறுவனத்திற்கு கிடைத்த மிகப் பெரிய கொள்முதல் டெண்டர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விமான கொள்முதலுக்கான என்ஜின் தேர்வு விரைவில் நடைபெறும் என்றும், A320 மற்றும் A321 வகை விமானங்கள் கலப்பு முறையில் கொள்முதல் செய்யப்பட உள்ளதாகவும் இண்டிகோ நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இந்த விமான கொள்முதலுக்கான ஒப்பந்தம், பாரீஸ் விமான கண்காட்சி 2023 நிகழ்ச்சியில் வைத்து கையெழுத்தானதாகவும், இண்டிகோ நிறுவனத்தின் தலைவர், தலைமை செயல் அதிகாரி உள்ளிடோர் முன்னிலையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இண்டிகோ விமான நிறுவனம் 300க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்கி வருவதாகவுன் இதுவரை 480 விமானங்களை ஆர்டர் கொடுத்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2030-2035 ஆம் ஆண்டிற்கான 500 விமானங்களின் கூடுதல் ஆர்டருடன், சேர்த்து அடுத்த 10 ஆண்டுகளில் இண்டிகோவின் ஆர்டர் எண்ணிக்கை ஏறத்தாழ ஆயிரம் விமானங்கள் என்ற அளவில் இருக்கும் என கூறப்பட்டு உள்ளது.
அதேநேரம் இந்த விமானங்கள் A320NEO, A321NEO மற்றும் A321XLR ஆகிய விமானங்களின் கலப்பு முறையை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 75க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்களை இண்டிகோ விமான நிறுவனம் இயக்கி வருகிறது. அதேபோல் 32 சர்வதேச வழித்தடங்களில் இண்டிகோ விமானங்களை இயக்கி வரும் நிலையில் அதன் எண்ணிக்கைகளை அதிகரிக்க இந்த விமான கொள்முதலை மேற்கொண்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அண்மையில் மற்றொரு பட்ஜெட் விமான சேவை நிறுவனமான கோ பர்ஸ்ட் திவால் நடவடிக்கையை மேற்கொண்ட நிலையில், இண்டிகோ நிறுவனத்தின் இந்த ஆர்டர் உள்நாட்டு விமான போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் உள்நாட்டு விமான நிறுவனமான ஏர் இந்தியாவை சிவில் விமான போக்குவரத்தில் இருந்து ஓரங்கட்டவே இண்டிகோ நிறுவனம் இந்த அசூர நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : Black Magic : பில்லி சூனியம் பயிற்சி.. மரத்தில் கட்டி தம்பதிக்கு அடி உதை!