மும்பை: தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் இருந்து, மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு, இண்டிகோ விமானம் சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த லாஸ் எரிக் ஹெரால்டு (62) என்பவரும் பயணம் செய்தார். குடிபோதையில் இருந்த அவர், விமானப் பணிப்பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்டதால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், பாங்காங்கில் இருந்து மும்பைக்கு கடந்த வியாழக்கிழமை வழக்கம் போல் இண்டிகோ விமானம் புறப்பட்டுள்ளது. அதில் பயணம் செய்த ஸ்வீடனை சேர்ந்த ஹெரால்டு மதுபோதையில் இருந்துள்ளார். விமானம் சென்று கொண்டிருக்கும் போது உணவு வழங்கப்படாது என விமான பணிப்பெண் கூறியிருக்கிறார். இதையடுத்து, விமானம் புறப்படும் முன், ஹெரால்டு சிக்கன் வாங்கியது தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து அவரிடம் சிக்கனுக்கான பணத்தை விமானப் பணிப்பெண் கேட்டுள்ளார். அப்போது POS இயந்திரத்தில் பணம் செலுத்துவது போல், விமானப் பணிப்பெண்ணிடம் ஹெரால்டு அத்துமீறி நடந்துள்ளார். மேலும் இருக்கையின் மீது ஏறி நின்று, விமானப் பணிப்பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். இதை தடுக்க வந்த சக பயணியையும் அவர் தாக்கியுள்ளார். இதனால் விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் விமானம் மும்பையில் தரையிறங்கிய உடன், பாதிக்கப்பட்ட விமானப் பணிப்பெண் போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஹெரால்டை கைது செய்தனர். பின்னர் அவர் அந்தேரி மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இது இந்தியாவில் கடந்த 3 மாதங்களில், விமானத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டது தொடர்பான 8வது சம்பவம் ஆகும்.
இதையும் படிங்க: ராவணன் மூக்கு அறுக்கும் விழா - மத்திய பிரதேசத்தில் விநோத பண்டிகை!